38 லா. ச. ராமாமிருதம்
என்பது இன்னொரு எண்ணம்; எண்ணத்தின்மேல் எண்ணம் பெருக்கி, அவை நடுவே சிக்குண்டு உழல்கிறேன். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி மனம் புண்ணாகி, அந்தப் புண்ணில் அவ்வப்போது புத்துயிர் கொள்கிறேன். அது அவள் லீலை.
அவள் யார்?
"நீ யார்?"
"யார் என்று எண்ணுகிறாய்?"
கேள்விக்குப் பதில் கேள்வி. கண்ணாமூச்சியில் விளையாட்டின் பொருமலில், சிந்தும் கேலியில், புலி நகங்கள் விரித்தபடி ஒன்றையொன்று வளைய வருகின்றன. இதயத்தின் ரணமேடை அவற்றின் விளையாட்டு அரங்கம்.
கேள்வியும் பதிலும் அலைகள். அலை தாண்டிய கடலில்தான் அமைதி என்று சொல்கிறார்கள். ஆனால் நடுக்கடலில் புயல் நேரவில்லையா? புயல் அடிக்கையில் மலையுயரம் அலைகள் எழும்பவில்லையா? கப்பலைப் பம்பரமாய் பின்னவில்லையா? நெருப்புக் குச்சியாய் ஒடிக்கவில்லையா? ஆகவே அலைகள் ஓய்வதுமில்லை, அமைதியும் நிரந்தரமில்லை. அப்படித்தானே? சொல், நீயே சொல்லடி!
எனக்குத் தெரியும் நீ சொல்லமாட்டாய், பேசவே மாட்டாய். புயலின் நடுவில், அமைதிப் புள்ளியில் பத்திரமாய் வீற்றிருக்கிறாய். உன் பத்திரத்தில் புன்னகை புரிகிறாய். உள்ளம், ஆவி, யாவும் கொள்ளை கொள்ளும் புன்னகை. எல்லாம் தெரிந்து, எல்லாம் உள் அடங்கி, நீ பேசமாட்டாய். ஏனெனில், உண்மை என்றுமே ஊமை.
நீ யாவும் அறிந்தவள். நீ உண்மை. நீ ஸெளந்தர்யை. நீ சாந்தி. இன்னமும் என்னதான் முயற்சி செய்தாலும் என்னால் சாதிக்க முடியாத ஏதேதோ ஆசைகளை,