ஜ்வாலாமுகி 39
மென்றும் மாறி மாறி ஆங்காங்கே முடிச்சுகள் விழுந்த சரடு. அந்த நினைவின் தொடர் தெரியாதபடி பிறவியும் மரணமும் தடுத்துவிடுகின்றன. அவ்வளவுதான். ஆனால் சரடு சரடுதான். பிறவியையும் மரணத்தையும் ஊடுருவிய அந்தச் சரடாய் திகழ்கிறாய், விளங்குகிறாய் அப்படித் தானே?
வேடிக்கை பார். தெளிவு அவ்வப்போது கிடைப்பது போல் காட்டினாலும், உறுதிப்படுத்த உன்னையே அணுக வேண்டியிருக்கிறது. ஆனால் நீ, விளக்கமாட்டாய். தெளிவிலிருந்து தோன்றும் புதுமூட்டங்களில் புதைந்து ஸ்புடத்தில் வெந்து கொண்டிருக்கிறேன். தவமென்பதே இதுதானோ?
உன்னை நான் ஏன் 'அவள்' என்று அழைக்கிறேன்? நீ 'அவளாய்'த்தானிருக்க வேண்டுமா? 'அவனா அல்லது அது'வாக இருக்கக்கூடாதா? ஒரு வேளை நான் பெண்ணாய்ப் பிறந்திருந்தால் என் ஆசைமுகத்தில் 'அவனாய் வாய்த்திருப்பாயோ?'
ஒன்று கேட்கிறேன். முற்றும் துறவி சங்கரன், பெண்ணை ஏன் பூஜிக்கிறான்? நீ காமாகூி, நீ சாரதா, நீ சக்தி. ஆனால் நீ பெண்தானே? அதுவும் சுகம், துக்கம், ஜனனம், மரணம் உலகமே மாயை என்று பாய்ச்சிகையையும் கட்டாணையும் கையின் ஒரு வீச்சில் கலைத்து விட்டு, இதன் நியாயம் என்ன? நான் தத்துவத்தில் வல்லேனல்லேன், எதைப் பேசினாலும், கேட்பதானாலும் எழுத்தின் ஒரு வழிதான் அறிவேன். என் கேள்வி, விசாரணை, வேதனை, அவ்வப்போது தெளிவு, அமைதி, புண் புண் ஆறல், தவம் எல்லாமே எனக்கு எழுத்துதான். வேறு அறியேன்.