பக்கம்:அவள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரியதர்சனி 49


அது அவளானால் அவள் எவள்? அதுதான் கொடுமை. நெற்றி கசகசக்கிறது. 'திகைப்பூண்டு' என்கிறார்களே அது உண்மையா? அடிக்கடி அவள் என்னைக் கேட்கும் கேள்வி.

"என்னப்பா, நாரத்தம் பச்சடின்னா ஒரு வெட்டு வெட்டுவியே, அம்மா நன்னாவும் பண்ணியிருக்கா, ஆனால் குருவியாட்டம் கொறிக்கறே, உடம்பு சரியில்லையா?"

பிள்ளையாண்டான் படு குஷியிலிருக்கிறான். சேவலின் கொண்டைச் சிலிர்ப்பிலிருக்கிறான். பஸ் ஸ்டாண்டில் இவன் கொடி கட்டிப் பறக்கறாப்போல இருக்கு. ஆனால், கண்களில் லேசான மருட்சி - அல்லது என் பிரமையா?

அவன் சொன்னாற்போல், நாங்கள் உண்மையிலேயே நல்ல நண்பர்கள். எனக்கு இந்த உறவு தேவையாயிருக்கிறது. உத்யோக ரீதியில் காம்ப் அல்லது வெளியூரில் கிரிக்கெட் மாட்ச் என்று இரண்டு நாட்கள் சேர்ந்தாப் போல, மது கண்ணில் படாவிட்டால் எனக்கு வேளையே மங்கிவிடுகிறது. திரும்பி வந்ததும் அவனைத் தொடணும் போல ஆசை பெருகுகிறது. வெட்கம், கெளரவம் தடுக்கின்றன.

மது நல்ல பையன்; அண்ட் ஐ ஆம் ஆன் ஓல்ட் மேன்.

என் பெருமூச்சு அவனுக்குக் கேட்டுவிடப் போகிறது. ஆனால், அந்தக் கவலை வேண்டாம். பூமியில் கால் பாவாது அவன் தன் உலகில் மிதந்துகொண்டிருக்கிறான். அவன் புன்னகை, ரகஸ்யமும். கனவொளியும் கொண்டு, அவனுடைய அத்தனை கலகலப்பிலும் அவனைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறது,

தட்இஸ் யூத்,


அ.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/93&oldid=1496622" இலிருந்து மீள்விக்கப்பட்டது