பக்கம்:அவள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 லா. ச. ராமாமிருதம்

உச்சிவெயில். வீட்டுள் வெக்கையின் மயக்கத்தில் அவரவர் தம்தம் மூலையில் கண் செருகிக் கிடக்கின்றனர். சந்தடி செய்யாமல், கிணற்றடிக்குச் சென்று எட்டிப் பார்க்கிறேன். இப்படியும் பேதலித்துப் போகணுமா? மீண்டும் நிகழாதா? பாதாமி மரத்திலிருந்து, பறவை எச்சம் உச்சி மண்டைமேல் சூடாய் விழுகிறது. கோபம் பொங்குகிறது. கூடவே அழுகை பயமுறுத்துகிறது.

மரத்து நிழலடியில் ஒதுங்குகிறேன்; ஒடுங்குகிறேன்.

இந்த வயதில் நீ எனக்கு நேர்வானேன்?

இப்படிக் கேள்வி பிறந்ததுமே நீ நேர்ந்துவிட்டாய், உன்னை எனக்கு உண்மையாக்கிக் கொண்டுவிட்டேன் என்கிற எண்ணம் அதன் முழுக்கனத்துடன் என் நெஞ்சின் ஆழத்துள் அமிழ்ந்ததும் உடல் புல்லரித்துப் போனது.

அப்போது நீ நிஜம்.

உண்மையின் தரிசனம்.

ஆம், மெய்யும் பொய்யும் அவரவர் மட்டில்தானே! ஆதார நிஜம், 'பேசிக் ட்ரூத்' என்று ஆயிரம் சொல்லிக்கொண்டாலும் எல்லாமே பார்வைகள். ஆயிரம் பார்வைகள், ஆயிரம் முகங்கள்.

இந்த ரீதியில் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்?

உன்னை எனக்கு நிஜம் பண்ணிக்கொண்டதனால் வேதனை அதிகரிக்கின்றதே ஒழிய, தெளிந்ததால் தென்பு ஏற்படவில்லை.

இதோ பார், நான் காய்ந்த சருகு என் உடல் இனி சிதைக்கு உரியது. இந்த நிலையில் நீ என்னுள் உன் பொறியை வைத்து வேடிக்கை பார்ப்பது நியாயமா? நெஞ்சில் அமிர்தம் சிக்கியதுபோல் அழியவும் முடியாது, வாழவும் வழியில்லை. தாங்க முடியவில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/94&oldid=1496625" இலிருந்து மீள்விக்கப்பட்டது