பிரியதர்சனி 51
ஒரு பெரிய கேவல் என்னின்று புறப்பட்டதும் மிரண்டுபோனேன். புரண்ட பூமியின் பெருமூச்சு, தாளொணா ஏக்கம். அதன் கபந்தவாய், மிருதுவாய் என்னைக் கவ்வியதும் கண்ணீர் புரண்டது.
'நித்யத்வத்தினின்று தெறித்த தருணம்
அது சிதறுண்டு நேர்ந்த கவிதை
சொல்லுக்குப் பதில் உகுத்த கண்ணிரில்தான்
காதல் பூக்கின்றது.
கானல் மேல் காதல். ஆகவே உன்மேல்
காதல் எனும்
எண்ணம் தைரியமாகத் தன்னில் தோன்றிவிட்டது.'
இரண்டு நாட்களாக அவன் மாறிவிட்டான். திடீரென ஒரே அடியாக வதங்கிவிட்டான். மகனே, என்ன நேர்ந்தது? உன்னை ஏன் தின்றுகொண்டிருக்கிறாய்? எங்களை, என்னை ஏன் ஒதுக்குகிறாய்?
வாய்விட்டுக் கேட்க முடியுமா? கேட்டால்தான் சொல்வானா?
ஆபீஸ் வேளைக்கு வீட்டை விட்டுப் போகிறான். ஆபீசுக்குப் போகிறானா? வேளை தாண்டி வீடு திரும்புகிறான். வீட்டில் இருட்டு மூலைகளில், மொட்டை மாடியில் வாழ்கிறான்.
காலேஜ் பஸ்ஸைத் தேடிப் போகலையே, பஸ் ஸ்டாண்டில் உன் கொடி விழுந்துவிட்டதா? அப்படித் தான் தோன்றுகிறது.
நேற்று மாலை, மாடு அவளுடைய நந்தவனத்தில் புகுந்துவிட்டது. அவள், கத்திக்கொண்டே லொங்கு லொங்கொன்று ஓடிவந்துகொண்டிருக்கையிலேயே அது போகிறபோக்கில், செடியோடு ஒரு தொட்டியை இழுத்துச் சென்று தொட்டி உடைந்து ரோஜாச் செடி மாட்டின் வாயில். சாவகாசமாய் நின்று மென்று தின்றது.