பிரியதர்சனி 53
வந்து மிதந்து, அந்த சலனத்திலேயே மறைந்தும் போய், உன் ஒளிவிலிருந்து வாட்டுகிறாய். அப்படித்தானே? சமாதானங்களை இப்படித்தான் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் நீ நிரூபணைக்கு அப்பாற்பட்டவள்.
மதுவைப் பார்க்க சஹிக்கவில்லை. என் கண்ணுக்குப் பாதியாகிவிட்டான். கண்களைச் சுற்றிக் கறுப்பு வளையங்கள். நின்றவிடத்தில் நிற்கிறான். நாலடி நடந்து மலைக்கிறான். கண்ணுக்கெதிரே இளைக்கிறான். மது, என்னடா செய்வேன்-செய்வோம்?
மின்சாரம் தோற்றுப்போய், வட்டமேஜை மீது ஏற்றி நட்டு வைத்திருக்கும் மெழுகுவர்த்தி ஒளி கூடத்தின் இருளைக் கூட்டிக் காட்டுகிறது. ஒரு மூலையில் அவள், ஒளியும் ஒலியும் அநியாயமாப் போய்விட்டதென்று புலம்பிக் கொண்டிருக்கிறாள்.
ஏதோ ஒரு அறை வாசலிலிருந்து மது வெளிப்படுகிறான். என்னை நோக்கி வருகிறான். என்னவோ சொல்லப்போகிறான். என் தோள்மேல் கை வைக்கிறான். காத்திருக்கிறேன். எங்கள் நிழல்கள் சுவர்மேல் வினோத நர்த்தனம் புரிகின்றன. அவன் உதடுகள் நடுங்குகின்றன. (ஷவரம் செய்து எத்தனை நாட்கள ஆயினவோ) விழிகள் நிறைகின்றன. கன்னம் கன்ற வழியும் அவன் கண்ணிர் என் நெஞ்சில் ஆவி கக்குகிறது. திரும்பிப் போகிறான். அந்தத் தருணம் வந்து நின்று, தயங்கி, பொரியாமல், அதன் கனத்துடன் திரும்பிப் போய் விட்டது.
"காதல் எனும் புரையோட்டம்
காதல் எனும் துரோக நதி. ஆனால் ஜீவநதி.
காதல் எனும் வென்னீர் வீழ்ச்சி.
அதன் தழும்பிலிருந்து மீளமுடியாது..."