பக்கம்:அவள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரியதர்சனி 55


யைத் தரையில் அழுத்தி மீண்டும் மண்டியாகி, மண்டியிலிருந்து எழுகிறாள். பின்னல் பூமியில் புரள்கிறது. தாழம்பூச் சிவப்பு.

"நன்னாயிரு மகராஜியா"- அவன் தாயார் திகைத்து நிற்கிறாள்.

"அப்பா நான் பொய் சொல்லியிருப்பேன். ஆனால், உங்களை ஏமாற்றியதில்லை. அப்பா! இவள் என்னை நம்பி, தன் பெற்றோரையே துறந்துவிட்டு வந்திருக்கிறாள் அப்பா. இவளும் மேஜர் சட்டப்படி இவள் ஃப்ரி அப்பா, இவள் பேர் அமீர்ஜான்."

மதுவின் தடலடி பாணி. அவன் கண்களில் ஒரு கண்ணாடிச் சாமான் தைரியம், துணிச்சல், விளிம்பு பிசகினால் -

"என்னடா சொல்றே மது? இவள் யாருடா?"

நான் அவளைக் கையமர்த்துகிறேன்.

நீ யார் என்று கேட்க எனக்குத் தேவையில்லை. ஏற்கெனவே உன் பிம்பம் காட்டி, சூசகம் காட்டியிருக்கிறாய். நீ வரப்போகும் அடையாளமாய் என் நெஞ்சின் சருகின்மேல் நடந்து சென்றிருக்கிறாய். அவ்வளவுதான். ஆனால் அதுவே எனக்குத் தாங்கவில்லை.

"அப்பா; அழாதேங்கோப்பா" தேம்பினான். 'என்னால் முடியவில்லை.'

உஷ்! மகனே, இது அழுகையில்லை. அருவிஸ்னானத்தில் என் அழுக்குகள் கழுவப்பட்டு துல்லியமாகிக் கொண்டிருக்கிறேன்.

நீ லலிதாம்பிகை.
நீ ராஜ ராஜேஸ்வரி.
நீ கன்யாகுமாரி.
நீ பாலா.
நீ அமிர் ஜான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/99&oldid=1496632" இலிருந்து மீள்விக்கப்பட்டது