பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

கம்பெனிகளுக்குப் போக நல்ல டிரெஸ் தேவை, பவுடர் முதலியன தேவை. பணம் சம்பாதிக்க வேறு வழியில்லை.

இப்படி அல்லலுற்ற அவளுக்கு அந்த உதவி டைரக்டரின் தயவு கிட்டியது. அவன் தாராளாமாகப் பண உதவி செய்தான். ஒன்றிரண்டு படங்களிலும் சான்ஸ் கிடைத்திருந்தது, இனியாவது: கெளரவமாக வாழ முயல வேண்டும் என்று நினைத்தாள். அதற்காக கருப்பசாமி வீட்டிலிருந்து வெளியேறினாள். தனியாக ஒரு சிறு வீடு பார்த்துக் குடிபுகுந்தாள். வீடா அது! பன்றிக் குச்சு மாதிரி. ஆனால், பட்டணத்தின் சுற்றுப்புறங்களிலே இத்தகைய குடிசைகள் தானே பெருத்துப் போயுள்ளன. இவற்றில் தானே கூனிக் குறுகி ஒண்டி ஒடுங்கிக் கிடக்கவேண்டியிருக்கிறது எண்ணறவர்களுக்கு? வேறு போக்கு ஏது? அவளும் அப்படித் துணிந்தாள். ஆனால் காலமும் அவளது புதிய அன்பனும் வஞ்சித்து விட்டதால் அவள் அதிகம் சீரழிய நேர்ந்தது. தனக்கு இனி விமோசனமே கிடையாது என்று நினைத்தாள். அவள் கருவுற்றதும் அவன் அவளை ஒதுக்கி விட்டான். அவனை அவள் பார்க்கவே முடியவில்லை எங்கிருக்கிறானோ தெரியாது.

அவள் மானத்தை விட்டுவிட்டு, கருப்பசாமியை போய் பார்த்தாளாம். 'வயிற்றில் வளர்ந்து வருவதை அழித்துவிடு. கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள். பிறகு எங்காவது சான்ஸ் கிடைக்குமா பார்க்கலாம்' என்றானாம். அதைவிட தன்னையே அழித்துவிடுவது நல்லது என்று அண்ணினாள் அவள். 'இவ்விதம் தான் பலபேர் வாழ்கிறார்கள், வாழ்வதற்காக எல்லாவற்றையும் துறந்துவிட்டார்கள். மனிதத்தன்மையையும்தான்!' என்றாள் புஷ்பா. பொங்கி வந்த துக்கத்தை அடக்கமுடியாமல் கண்ணீர் வடித்தாள். ஜன்னலில் முகம் சாய்ந்து அழுது கொண்டு கிடந்தாள் அவள்.அடங்காத விம்முதலின் அறிகுறியாக, ஜன்னலின் பக்கம் சாய்ந்திருந்த அவள் முதுகு உயர்ந்து தாழும் கணத்துக்குக் கணம். அவள் அழுகையில் தான் ஆறுதல் காணவேண்டும். அப்படியும் ஆறுதல் பெற முடியுமா?

. :