பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கண்ணாத்தாளும், கண்ணப்பனும் எர்ணாகுளத்திற்குப் பயணமானார்கள். கண்ணப்பன் எர்ணாகுளத்தில் ஒரு "பைனான்சிங் கம்பெனி’யைத் தொடங்கினான். அங்கு அவன் என்னதான் தொழில் நடத்தினாலும் அங்கும் அவனது தமிழ்ப்பற்று அவனை விட்டு நீங்கவில்லை, கொச்சித் துறைமுகத்தில் வேலை பார்க்கும் தமிழர்களிடத்தில் அவன் :'கொடுக்கல் வாங்கல்' பண்ணிக்கொண்டே தமிழ்ப் பணியிலும் ஈடுபட்டான். நாளடைவில் துறைமுகத் தமிழர்களின் தலைவனாகி விட்டான் கண்ணப்பன். கொச்சித் துறைமுகத் தமிழர்கள் மத்தியில் எழும் குடும்பச் சண்டைகள் முதல் பெரிய தகராறுகள் வரை கண்ணப்பன் தலையீடு தேவைப்பட்டது. கண்ணப்பன், காலக்கிரமத்தில் தமிழர்களின் அன்பால் 'கண்ணப்பர்’ ஆகிவிட்டான். கண்ணப்பர் இங்கு இருக்கும் வரை மலையாளத் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை குறையாது என்ற நம்பிக்கை கொச்சியில் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் வேரூன்றி இருந்தது.

புகழ் இருக்கிறதே அது இலக்கியத்தில் வரும் காதலைப் போன்றது. அரசகுமாரியின் ஆசை ஆண்டியைத் தேடி அலையும்; பிரபு வீட்டுப்பிள்ளை பிச்சைக்காரியைச் சுற்றி வட்டமிடுவான். அதைப் போலத் தான் புகழும்! புகழை விரும்பிச்செயல் படுவோருக்கு அது கிட்டாது. புகழ் யாரை விரும்புகிறதோ, அது அவனைத் தேடி அலைந்து கொண்டிருக்கும். கண்ணப்பன் கதையும் அப்படித்தான். அவன் அங்கு பைனான்சிங் கம்பெனி வைக்கப் போனான். அங்கே 'தலைவர்' பதவி அவன் காலடியில் காத்துக்கிடந்தது.

கண்ணாத்தாளுக்கு இவையெல்லாம் பெரிதாகப் படவில்லை. அவளுக்கு அவள் விடுத்து வந்த சபதம் தான் அவள் மனக்கண் முன் வந்து படமெடுத்து ஆடிக்கொண்டே இருந்தது, வட்டித் தொழிலில் போட்ட் மூலதனம் முறையாகத் திரும்பவில்லையே என்ற கவலையை விட வயிற்றில் குழந்தை உருவாகவில்லையே என்ற கவலை தான் அவள் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

"கண்ணா!"

"இருக்கிறேன்; நான் எங்கே போகப் போகிறேன்"

"துறைமுகத்திலிருந்து வேறு யாராவது வந்தார்களா?!

"இரண்டு பேர் வந்து வட்டிப்பணத்தைக் கட்டிவிட்டுப் போனார்கள்!"

நான் அதையா கேட்டேன்? யாராவது தமிழ்ச்சங்கம் சம்பந்தமாக என்று கேட்கிறேன்"