பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

“சண்டாளி, ஏதாவது போலிச் சமாதானத்தை எழுதியிருப்பாள்; என்னதான் அவள் எழுதியிருந்தாலும் நான் அதை நம்பப்போவதில்லை. ஒரு டாக்டரின் பரிசோதனைக்குப் பிறகு-உனக்கு இனிமேல் கருத்தரிக்க வழியே இல்லை என்று சொன்னபிறகு இவளுக்கு வளைகாப்பு வருகிறதென்றால் இதைவிட ஒரு புருஷனுக்கு மானக்கேடான சம்பவம் உண்டா?” - என்ற மனக்குமுறலுடன் அவன் அந்தக் கடிதத்தை பிரித்தான். ஆனால் அதில்,

அன்புள்ள அத்தான் அவர்களுக்கு, வணக்கம். நேற்று என் தகப்பனாரின் தபால் உங்களுக்குக் கிடைத்திருக்கும். அதைப் பார்த்ததும் அளவில்லாத ஆனந்தம் அடைந்திருப்பீர்கள். நாம் எர்ணாகுளத்திற்குப் போன முகூர்த்தமாக நமக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. என்று புளகாங்கிதம் அடைந்திருப்பீர்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியை இந்தக் கடிதம் உடைத்துத் தூளாக்கி விடப்போகிறதே என்பதை எண்ணி என் மனம் பெரிதும் துன்புறுகிறது.

அத்தான், எனக்கு வளைகாப்பு நடத்திட நாள் குறித்து அனுப்பும்படி என் தகப்பனார் உங்களுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக இங்கே பேசிக் கொள்கிறார்கள். இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு எழுதிய கடிதம் அது! வளைகாப்பு என்பது ஐந்தாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சி. உங்களுக்குத் தெரியாமலா எனக்கு வளைகாப்பு வந்துவிடும்? ஆனால் இங்கே இருக்கிறவர்களுக்கு அதெல்லாம் தெரிந்திட நியாயமில்லை அல்லவா? எல்லாமே நீங்களும் நானும் எதிர்பாராத நாடகமாக நடந்துவிட்டது.

நாம் இருவரும் சென்ற வருஷம் எர்ணாகுளத்திற்குப் புறப்படும்போது - நான் இனிமேல் கோயிலூருக்குத் திரும்பும்போது வளைகாப்பு விழாவிற்குத்தான் வருவேன் என்று என் வயிற்றெரிச்சலைச் சபதமாகப் போட்டுவிட்டு வந்தேன். அது உங்களுக்கும் தெரியும். அதை உண்மை என்று எண்ணிக் கொண்டு உடல் நலமில்லாத தாய் தகப்பனைப் பார்க்க வந்த என்ன என் பெற்றோர்களும், உங்கள் பெற்றோர்களும் சேர்ந்து கர்ப்பவதியாக்கி விட்டார்கள். அதை மறுக்கவோ, தெளிவுபடுத்தவோ அவர்கள் எனக்கு அவகாசம் அளிக்கவில்லை, அவ்வளவு குதூகலம் அவர்களுக்கு! ஊர் முழுதும் ஒரே பேச்சு - கண்ணாத்தாளுக்கு வளைகாப்பு வந்துவிட்ட தென்று! உறவினர் வீட்டுப் பெண்களெல்லாம் - வயிறு சிறிதாக இருப்பதால் பெண் குழந்தையாகத்தான் இருக்கும் - என்று ஜோசியம் சொல்லத் தொடங்கி விட்டார்கள். எர்ணாகுளம் தண்ணீர் நல்ல தண்ணிர்: குருவாயூரப்பன் ஒரு வரதையான தெய்வம் என்ற வர்ணனைக்கும் இங்கே குறைவில்லை. பிள்ளை இல்லாதவர்களெல்லாம் இனிமேல் ராமேஸ்வரத்திற்கோ, காசிக்கோ போகவேண்டிப்தில்லை, எர்ணாகுளம் போய் குடி,