பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

"என்னை விட்டுத்தான் வச்சிருந்துச்சு; ஆனால் கடைசி நேரத்திலே, என் நண்பர் சிதம்பரம் வழியா எனக்குத் தெரிஞ்சு போச்சு!"

"தெரிஞ்சவரையிலும் நல்லதாய் போச்சு. இல் லாட்டி, இந்தப் பிறவியிலே நான் உங்களைத் திரும்பவும் சந்திச்சிருக்க முடியாதுதான்!”

ரேவதியின் புனிதமான அந்தரங்க மனதில் ஒரு மனோலயமான பிரார்த்தனை சரணாகதி அடைந்திட, அவள் மெய்மறக்க நேர்கிறது. 'கருமாரி, இவரை நீயே தான் என்னிடம் அனுப்பி வச்சிருக்கிறே. நீ பேசாட்டியும், உன் நல்ல புத்தியின் புண்ணியத்தினாலே, நான் இத்தனை காலமும் அனுபவிச்ச சலனங்களையும், சஞ்சலங்களையும் மானம் மரியாதையோட கடந்து, நானும் நல்ல புத்தியைப் பெற்றுக்கிட்டேன். என் முன்னாள் கணவரான ஞானசீலனை நீ எனக்கு நிரந்தரக் கணவராக ஆக்கி வைப்பதன் மூலம்தான், எனக்கு உண்டான ஒரு நல்ல பாதையை உன்னாலே திறந்து விடவும் முடியும். அப்பத்தான், எந்த நிமிடத்திலே நான் செத்தாலும் என் உயிர் நிம்மதியாகப் பிரியவும் வழி பிறக்கும்!'

சுயதரிசனம் முடிந்து விழிப்படைகிறாள், அவள், எதிரே உயிரும் உடம்புமாகக் காட்சியளிப்பது ஞானசீலன் அல்லவா? ஒ!... ராஜராகம் அவளுக்கு, ரேவதிக்கு டாக்டர் ரேவதிக்குப் பிடிபட்டு விட்டதோ!...