பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

ஞானசீலனை மறுபடியும் பார்க்கிறதுக்கு பத்து ஆண்டுகள் இடைவெளி தேவைப்பட்டிருக்குதே! என் கோபாவேசம் முழுவதும் தனிஞ்ச காலத்திலே, அவர் கண்காணாமல் எங்கேயோ போயிட்டார். இடையிலே ஒருவாட்டி அவரைத் திரும்பச் சந்திக்கிற பொன் வாய்ப்பை என் தாய் எனக்குக் கொடுக்க மனசு இரங்கியிருந்தால், என்னோட மன்னிப்புக் கடிதத்தை அவர் கையிலே கொடுத் திருக்க மாட்டேனா? இதழ்கள் விலகின. என்னவோ சொல்லத் துடித்தாள்.

"மிஸ் ரேவதி, நான் கதை கேட்க வரவில்லை!"

"மிஸ்டர் ஞானசீலன், நானும் கதை சொல்ல விரும்பவில்லை!"

"ரேவதி!" என்று ஆவேசமான ஆத்திரத்தில் கூவினார், ஞானசீலன்,

"நீங்கள் போடுற கூச்சலைக் கேட்டுப் பயப்படுறத்துக்கு நான் ஒண்ணும் கொக்கு இல்லே! நான் யார், தெரியுமா? நான் வெறும் ரேவதி இல்லை! நான் மிஸஸ் ரேவதி ஞானசீலன்! ஆமாம்; புரிஞ்சுக்கங்க!" ஆத்திர ஆவேசத்தில் உணர்ச்சிகள் கொப்புளிக்க விடை கூறினாள், ரேவதி.

"உங்களை இனித்தான் நான் புரிஞ்சுக்கிடப் போறேனா? சும்மா ஏன் நாடகம் போடுங்க?”

"நாடகம் போடுறது நீங்கள்தான்! உங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்து, சிதம்பரம், சமூகவேசி மாதங்கினி, ராத்திரி ரவுடி முத்தையன் முதலான பேர்களையும் தொட்டுப்பாருங்க, ஞானசீலன்! நாடகம் போட்டதும், நடிப்பதும் நீங்களேதான் என்கிற உண்மையை நீங்கள் புரிஞ்சுக்கிடுவீங்க!”

"இப்பவும் நீங்கள் என்னைக் குற்றவாளி ஆக்குறிங்க, டாக்டர் ரேவதி."