பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99


“முடியாது!”

“முடியாதா?”

“முடியாது! முடியாது!...”

“அப்படியா? மகிழ்ச்சி, ரொம்ப மகிழ்ச்சி! என்னை நீங்கள் ரேவதி ஞானசீலனாக அங்கீகாரம் செய்யத் தேவையில்லே...எனது தூய அந்தரங்கத்திலே நேசத்தோடவும் பாசத்தோடவும், அன்போடவும், கருணையோடவும் சிரிச்சுக் கூத்தாடிக்கிட்டு இருக்கிற என்னோட உண்மையான அத்தானாக பழைய ஞானசீலன் என்னை ரேவதி ஞானசீலனாக மனப்பூர்வமாக அங்கீகரிச்சு ஏற்றுக் கிட்டு பத்தாண்டு ஆகிடுச்சு! அது போதும் எனக்கு!” புயல் கடந்த அமைதியில் நிதானமாகவே பேசி நிறுத்தினாள், ரேவதி.

“நான் வர்றேன்...குட்பை !”

நகர்கிறார், ஞானசீலன்.

“மிஸ்டர் ஞானசீலன், ஒரு நிமிடம் நில்லுங்க!”

ஞானசீலன் நின்றார்.

மறுகணம்

அங்கே, ரேவதி துப்பாக்கியும் கையுமாகத் தோன்றினாள். “இப்பிறப்பிலே உங்களைக் கண்ணுக்குக் கண்ணாகத் திருப்பிச் சந்திக்கவே வாய்க்காதின்னு ஆத்திரப்பட்டு, புத்தம் புதிசான இந்தத் துப்பாக்கியாலே என் உயிரை நானே குடிச்சிடத் துடிதுடிச்ச நேரத்திலே தான், நீங்கள் என் முன் வந்து நின்னீங்க!...தெய்வாதீனமாய் என்னைத் தேடிவந்து சேர்ந்த நீங்களோ விதியாக என்னைச் சோதிச்சிட்டீங்க! என்னை நிராகரிச்சிட்டீங்க! அப்புறம் உங்களுக்கு இந்த உலகத்திலே என்ன வேலை? மிஸ்டர் ஞானசீலன்...நான் ரேவதி ஞானசீலன்...டாக்டர் ரேவதி ஞானசீலன் ஆணையிடுகிறேன்...எஸ்...அட்டென்ஷன் ப்ளீஸ் - ஒன்... டூ...!” என்று வீரகர்ச்சனை செய்தாள். ஊழிக் கூத்தாடிய எல்லை சக்தியா அவள்?