பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அதைப் புரிஞ்சிக்கிடாதவங்க ‘டாக்டர் ரேவதி அகம்பாவம் பிடிச்சவங்க’ என்று சொல்லுவாங்க. நான் அறிஞ்ச வரை, ரேவதி அம்மா அன்புக்கு ரொம்ப ரொம்பக் கட்டுப்படுறவங்க, எதிலேயும் ஒரு நியாயம் வேணும்னு நினைக்கிறதும் நம்புறதும் தப்பா?” என்று கேட்டாள், பிருந்தா. அவள் கழுத்தில் தங்கச் சங்கிலி மின்னியது.

“பெரிய இடத்து விஷயம் இதெல்லாம்; நமக்கேன் வம்பு? ஆனா, ஒரு சின்னச் சந்தேகம், பிருந்தா!”

“சந்தேகப்படுறதுதான் படுறீங்க; பெரிசாகவே சந்தேகப்படுறது தானே, மஞ்சு?”

“டாக்டரம்மாவுக்கு எப்படியும் முப்பது, முப்பத்திரண்டு வயசு இருக்காதா? இன்னமும் அவங்க ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?”

“டாக்டர் ரேவதி அம்மாவோட தனிப்பட்ட சுதந்திரமான மனப்போக்குக்கு ஈடு கொடுத்து ஒத்துப் போற மனப்பக்குவம் கொண்ட ஒரு நல்ல ஆண்பிள்ளையை இதுவரை அவங்க சந்திக்க முடியாமல் இருந்திருக்கலாம், இல்லையா அக்கா?”

“கதை அப்படியிருந்தால், நல்லதுதான் தங்கச்சி! ஆனால்...”

கூடத்தில் கூச்சல் கேட்கவே அவர்களின் பேச்சு தடைப்பட்டது.

கூப்பாடு போட்டவன், ஓர் ஆண்பிள்ளை சிங்கம்; ஓடிக் கொண்டிருக்கிற பாம்பை ‘நச்’ சென்று நசுக்கி விடுகிற பொல்லாத-பொல்லாத்தனமான பருவம். பின், இவன் இப்படி ‘குய்யோ முறையோ’ என்று கூச்சல் போடலாமா?-அவன் வயிற்று வலி அவனை இப்படி அலற வைத்தது.

இளஞ்சிங்கத்தை தோளுக்குத் தோளாக துணை நிறுத்தி அணைத்தபடி, கூடத்துள் நுழைந்த பெரியவர்,