பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. யார் அந்த ஆள்?


ருமை நிறக் கண்ணனாக வடிவம் அமைத்துக் கொண்டிருந்த கங்குலின் கருக்கல் பொழுது கழிய, விடியல் வேளை கண் சிமிட்டுகிறது.

முழுமையான இரவிலே, கடுகத்தனை நேரம் கூட, ரேவதி கண் அயரவில்லை. பட்டுத் தலையணையை தலைமாட்டிலும் இரப்பர் பஞ்சுத் துண்டுகளை கால்மாட்டிலும் பக்கவாட்டிலுமாகப் பரப்பிப் போட்ட வண்ணம், வண்ணக் கலாப மயிலென மல்லார்ந்து படுத்திருந்தவளுக்கு உடல் மாத்திரமல்ல, உள்ளமும் பரபரப்புக் கொள்ளவே, மாடிக் கூடத்தின் தாழ்களை விலக்கி, வெளியே வந்தாள்.

இயற்கையான காற்றில் அவளது பெண்மை இதமாகவும் ஆறுதல் அடைந்தது. திறந்த வெளியிலே, திறந்த மனத்தோடும் திறக்காத மேனியோடும் அங்கும் இங்கும் நடை பழகினாள். என்னவெல்லாமோ ஞாபகங்கள் காலத்தையும் தூரத்தையும் பொய்க் கணக்காக ஆக்கி சிலிர்த்து வெடித்தன.

கீழ்த் தளத்தில் பூங்குயில் ஐந்து முறை, லயம் தவறாமல் ‘குக்கூ’ வென்று கூவியது.

ரேவதி நின்றாள்.

அரசினர் பொது மருத்துவமனையிலே அவள் ஆறு மணி பணிக்குப் போனால் போதும்! இன்றைக்குச் சற்று முன்னதாகவே கிளம்பினால் கூடத் தேவலாம். மனம்