பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உங்கள் ‘பூவை’ பேசுகிறேன்:


டைமுறைப் பூர்வமான வேடிக்கை ஒன்று! இந்த வேடிக்கை, மண்ணுலக வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், விண்ணுலகத்தின் வாழ்விற்கும் ஒரு விதியாகவும்-விதியின் விதியாகவும் அமைந்தது!

உண்மைதான்!

கவிச்சக்கரவர்த்திக்கு விதியின் நாயகியாக மிதிலைச் செல்வியாம் சீதை கிடைத்தாள்.

எனக்கோ, விதிக்கு ஒரு நாயகியாக ரேவதி கிடைத்தாள்! அவள் வெறும் ரேவதி அல்லள்; டாக்டர் ரேவதி எம். எஸ், எம். பி. பி. எஸ், டி.ஜி.ஒ, ஃஎப். ஆர். ஸி. எஸ், ஃஎம். ஐ. ஸி. எஸ் , ஃஎப். ஏ. ஸி. எஸ்.!. பட்டங்கள் ஆள்கின்றவள்; சட்டங்கள் செய்கின்றவளும் அவளே!-அதனால்தான், “நானே ஒரு விதிதான்!... ஆமாம்; எனக்கு நானேதான் விதி!” என்பதாகப் பெண்மை சிறக்கவும் நிறக்கவும் தமிழச்சியாக முழக்கம் செய்தாளோ?

அவள் வேடிக்கையானவள்!-அவள் எனில், டாக்டர் ரேவதி!

வாழ்க்கை மட்டிலும், மட்டில்லா வேடிக்கை இல்லையா, என்ன?

பாரதி, அமரகவி!- ஆகவேதான், இன்றைய ஜனநாயக மரபு துலங்கிட, அன்றைக்கே அவனால் பாட்டுக் கட்ட முடிந்தது! எங்கெங்கும் சக்தியைக் கண்டவன்! - அதனால்தான், பெண்மை வாழ்கவென்றும், பெண்மை வெல்கவென்றும் கூத்திட்டான்; கூத்து ஆடினான்!