45
நீல வண்ணக் கண்ணா வாடா!
நீ ஒரு முத்தம் தாடா!
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா!
பிள்ளையில்லாக் கலியும் தீர
வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்!
எல்லையில்லாக் கருணை தன்னை
என்ன வென்று சொல் வேனப்பா?
வானம்பாடி கானம் கேட்டு
வசந்த காலத் தென்றல் காற்றில்
தேன் மலர்கள் சிரிக்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் மாட்சி!
தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்!
கண்ணால் உன்னைக் கண்டால் போதும்!
கவலை யெல்லாம் பறந்தே போகும்.
சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் கருணை காட்டு!
நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே!
நியாயமல்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு!