பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபதேசம் அன்று வெள்ளிக் கிழமையாதலால், வழக்கத்திற்கு அதிகமான கூட்டம். கையில் பூவுடன் சிலரும், அர்ச்சனைத் தட்டுக்களுடன் சிலரும், பெரிய மாலைகள், பன்னீர் பாட்டில்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு சிலருமாக மக்கள் கூட்டம், அந்த சாமியார் இருந்த திக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் கையில் இருந்த ஆராதனைப் பொருட்கள், அவர்களின் பொருளாதார வசதியைவிட அவர்கள் சுமக்கும் பிரச்னைகளின் கனபரிமாணத்தையே காட்டின. நோய் தீர வேண்டும் என்று வந்திருப்பவர்கள் கரங்களில் அர்ச்சனைத் தட்டுக்கள்; புரமோஷன் வரவேண்டும் என்று பிராத்திப்பவர்கள் கைகளில் பெரிய மாலைகள். பன்னீர் பாட்டில்கள், எலுமிச்சம் பழங்கள்; அரசியல்வாதிகளுக்கே இதுவரை மாலை போட்டுப் பழகிய அவர்கள், இப்போது அந்த சாமியாரிடம் வந்திருப்பதுபோல் தோன்றியது. பிக்னிக்' சுவைக்காக வந்திருந்தவர்கள் போல் தோன்றிய சிலர் 'இங்கிலிஷில் பேசிக் கொண்டே, வெறுங்கையோடு நின்றார்கள். அந்த வரிசையில் நின்ற கார்த்தியின் சுருட்டைத் தலையையும், அதன் 'ஸ்டைலையும் 'டபுள் நிட் ஃபாரின் ஆடைகளையும் பார்ப்பவர்கள், அவை வியாபித்திருந்த அந்த மேனிக்குள் பக்தியும் வியாபித்திருக்கும் என்று நினைக்க முடியாது. அவன் கையில் பத்து பைசா கற்பூரம் மட்டும் இருந்தது.