பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 143 கடலின் பக்கமாய் இன்னொரு தள்ளலுமாய் வேகப்படுத்தி ஏவிவிட்டாள். ஒரே கூட்டமயம். ஒவ்வொருத்தரும் தத்தம் இயல்புக்கு ஏற்ப, கடல் முனைப் பரப்பில் நடமாடுகிறார்கள். அலைகளை மிதித்து நடப்பவர்கள், மிதிக்காமல் தாவுகிறவர்கள், அலை மறித்து நிற்பவர்கள், முங்கி எடுக்கிறவர்கள், நிலத்தில் எப்படியோ அந்தக் கடல்பரப்பில் அத்தனைப் பெண்களும் அச்ச, மட, நாணத்தோடு அல்லாடுகிறார்கள். இந்தப் பொன்னம்பலத்திற்கு, வைகுண்ட சாமிக்குப்போல் தோன்றிய விஞ்சைக் கடல், கோல வடிவிற்கு, தேனிலவுக் கடலாய் காட்சியளிக்கிறது. கணவனின் இடுப்பைக் கிள்ளுகிறாள். முதுகில் குத்துகிறாள். விலாவில் இடிக்கிறாள். பொன்னம்பலம் அதிர்ந்து போகிறார். முருகனைப் பற்றிய நினைவு வரவேண்டிய சமயத்தில், அந்த நினைப்பை வருவிக்கிறாளே' என்று மனைவியை கோபமாய் பார்க்கிறார். அந்தக் கோபம், தாபமானபோது, முருகா முருகா என்று கன்னத்தில் தப்பளம் போடுகிறார். அவள் முந்தானைக்குள் சிக்கிய வேட்டிச் சொருகை நீட்டிக் கொள்கிறார். குடும்பப் பாங்கான பெண்போல், விலகி நடக்கிறார். குளித்து கோவில் பக்கம் போனபோது, பாட்டி, தட்டுப் பழத்தை நீட்டுகிறாள். உடனே இந்தக் கோலவடிவு, எங்களுக்கும் சேர்த்து நீ கும்பிட்டு வா பாட்டி, நாங்க இங்கேயே பாராக்கு பார்க்கோம்னி என்று பாட்டியை, முருகன் கோவிலின் வெளிப்பிரகாரத்தின் முதல் படியில் இறக்குகிறாள். பாட்டியைவிட, பொன்னம்பலமே ஆழமாய் திடுக்கிடுகிறார். ஒனக்கு கோயில் குளத்துல நம்பிக்கை இல்லையா?" என்று பிரமை தட்டிக் கேட்கிறார். இவள், ஆமாம் என்பதற்கு முகத்தை அபிநயமாக்கிவிட்டு, ஏதோ