பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 வீட்டுக் கணக்கும்... ஆகாயக் கணக்கும்... இப்போதோ, அதே அந்த பொன்னம்பலம், நினைவுகளின் சுடு சாம்பல் போலானார். மனசாட்சி சுமையாய் கனத்தது. நம்ப முடியாத அனுபவங்களுக்கும் நம்பக்கூடிய பகுத்தறிவுக்கும் இடையே இழுபறியானார். அந்தப் படங்களை எடுக்கவும் முடியவில்லை. நீடித்துவிடவும் மனமில்லை. எடுத்த எடுப்பிலேயே புலி த்தோல் நிற இருக்கையில் உட்காருகிறவர். நின்ற கோலமானார். அந்த சமயத்தில், கோலவடிவு வியப்போடு உள்ளே வருகிறாள். அந்த சாமியறைக்கு மட்டுமல்ல அதன் திசை நோக்கிக் கூட எட்டிப் பார்க்காதவள். "ஏன் இப்படி பித்துப் பிடித்து நிற்கீங்க..?" பொன்னம்பலம் குழந்தையாய் ஒப்பிக்கிறார். இந் த ப் படங்க ைள எ டு த் தி ட லா மு ன்னு தீர்மானிச்சுட்டேன் கோலம். ஏன்னா ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலயும் இருக்கிற புராணக் கதைகள் சின்னத்தனமாயும், சில சமயம் அருவெறுப்பாயும் இருக்கு. சவ்வாது மலையில். ஒன்கிட்ட சொன்னேனே பிரபஞ்ச காலடித் தரிசனம். அந்த தரிசனத்திற்கு, பிறகு இந்தப்படங்களை எடுக்க நினைத்தேன். ஆனாலும் எடுக்க முடியல. காரணம் ஒவ்வொரு படத்துக்கும் பின்னணியான அனுபவம் என்னை வாழ வைத்தவை. எப்போதும் தீமையிடம் சரணடையாமல் நிற்க வைத்தவை. எனக்கு ஒரே குழப்பமாய் இருக்குது கோலம். நீதான் வழிகாட்ட னும் கோலம்." பொன்னம்பலம் மனைவியின் தோளில் தலை சாய்த்தார். அவள் தோளில் வாயுரச ஏதேதோ பேசினார். கோல வடிவு, அவர் முகத்தை திமிர்த்தினாள். கைகளால் முகத்திற்கு ஒத்தடம் கொடுத்தாள்.