பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பரும்-அப்பானும் "நீங்கெல்லாம் எதுக்காக அப்பா சாமி கும்பிடணும். தெரியாமத்தான் கேட்கேன்" அரசாங்கக் கடனில் கட்டப்பட்டதால், கடனே' என்று காட்சி காட்டும் சின்னஞ்சிறிய அந்த வீட்டின் விசாலமான முன்புறத்தில், அந்த இடத்தின் ஒரே ஒர் அலங்காரமாய்த் தோன்றும் பூச்செடிகளில் மலர்களைக் கொய்து, கையில் இருந்த பூக்கூடையை அந்த மலர்களாலேயே, பொங்கி வழியவிட்டு, வீட்டுக்குள் வந்த இசக்கியா பிள்ளை ஒர் ஒரமாய் உள்ள பூஜை அறைக்குள் வழக்கமான வேகத்தோடு தான் போகப் போனார். சமையலறையைத் தாண்டி, மகள் இருந்த அறையின் நினைவே இல்லாமல் அகலப் போனவரை, அந்தக் குரல் கட்டிப் போட்டது. டேப்புகளால் பின்னப்பட்ட கட்டிலில், கரங்களைப் பின்னி, அந்தப் பின்னலையே தலையணையாக்கி, குப்புறக் கிடந்த மகளை 'சிவசிவ' என்று மனதுக்குள் ஓலமிட்டு மருண்டபடி பார்த்தார். அடியற்றுக் கிடந்த அவளோ, தோள்களை நிமிர்த்தாமலே கழுத்தை வளைத்து தந்தையையே பார்த்தாள். இசக்கியா பிள்ளை க்கு அவள் தனது கழுத்தில் தொங்கும் உத்திராட்ச மாலையையே பார்ப்பதுபோல் தெரிந்தது. அதைப் பறிக்கப்போவது போன்ற பார்வை.