பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VII கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகம் உண்மை. இங்குள்ள மக்கள் உண்மை. இவர்களின் தலைவிதியை சமூக அமைப்புதான் தீர்மானிக்கும்; தீர்மானிக்க வேண்டும் என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆகையால், இவை என் இயல்பான முற்போக்கு எழுத்திற்கு முரணனானது அல்ல என்று நம்புகிறேன். எனது ஆன்மீகத் தேடல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதும் போலித்தனமற்ற ஒரு முற்போக்கு முயற்சி என்றே கருதுகிறேன். பெரியவர் கே.எம். அவர்களின் பார்வையில்... இன்னும் எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது. பத்து பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கூட்டம், என்னை செம்மலரில் வார்த்தெடுத்த பெரியவர் கே.எம். முத்தையா தலைமையில் நடைபெற்றது. நானும் பேச்சாளனாக அழைக்கப்பட்டேன். பேசுவதற்கு முன்பு திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்று, நெற்றியில் குங்குமத்துடன் வந்தேன். உடனே கேம்.எம். அவர்கள் சூதுவாது இல்லாமல், நெற்றியில் என்ன ரத்தம் என்று கேட்டார். நான் விளக்கினேன். அவர், உடனே "இது உங்கள் தனிநபர் உரிமை" என்றார் பெருந் தன்மையாக. இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால், நான் நினைத்திருந்தால் முகம் கழுவி குங்குமத்தை அழித்துவிட்டு, கோயில் குளத்திற்குப் போகாத அந்த கூட்டத்திற்கு போயிருக்கலாம். அந்தப் போலித்தனம் எனக்கு அப்போதும் கிடையாது, இப்போதும் கிடையாது. சிவபெருமான் காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது. விஷ்ணு கருடனில் பறப்பது. முருகன்மயிலில் ஆடுவது. கன்னிமேரி மீது பரிசுத்த ஆவி படர்ந்தது போன்ற புராண நம்பிக்கைகளை நான் நம்பவில்லை. அதேசமயம் ஆலயங்களும், சர்ச்சுகளும், மசூதிகளும், குருதுவாராக்களும், தியானங்களும், யோகங்களும், ஒரு புதிர் கணக்கிற்கு விடையாக இருக்கலாம். "அல்ஜீப்ரா கணக்கில், ஒரு பொருளின் விலையை "எக்ஸ்" என்றும், அதோடு சேர்ந்து வாங்கப் பட்ட இன்னொரு பொருளின் விலையை "ஒய்" என்றும் வைத்துக் கொண்டு, அந்தப் பொருள்களின் தனித்தனி விலையை கண்டு பிடிப்பது போன்றது இந்த ஆலய வகையறாக்கள். இன்னும்