பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv

அம்மன்னற்குரிய அரியாசனம் எது? அன்னையின் மெல்லிய மடி. அவர் அரசு எது? அன்னையின் இதய கமலம். அவர் ஆளும் சட்டம் எது? அன்பு :அன்பு.

அடுத்த பாகத்தில் காட்சி தருவது காதல்மலர். "என் காதலி ரோஜா மலரானால், நான் ஒரு பனித்துளியானால் ’’ என்ற பாட்டிலே இன்பச்சுவை சொட்டுகின்றது. செவ்விய ரோஜா மலரில் கதிரவன் ஒளி சேரும் பொழுது, ஒளிமலர்ந்ததா அன்றி மலர் ஒளிர்ந்ததா என்று கண்டோர் மயங்குமாறு எழுகின்ற இன்பக்காட்சியும், சிவந்த ரோஜாப்பூவின் மேனியிலே தங்கும் பனித்துளிகள் வெண்மை மாறிச் செம்மையுறும் அழகும், மெல்லிய தென்றல் முள்ளின் இடையே நுழைந்து ரோஜா மலரை அணைந்து நறுமணங் கவரும் நீர்மையும் இந்நூலில் எழிலுற எழுதிக் காட்டப்படுகின்றன.

சுதந்திரத்தில் அளவிலாத் தாகங்கொண்ட ஆங்கிலப் பெருங் கவிஞராகிய ஷெல்லியின் அழகிய பாட்டை ஆங்கிலர்க்கு ஒரு கீதம் என்று மிகத் தாக்காக மொழி பெயர்த்துள்ளார் இந்நூலாசிரியர்."ஆங்கில மக்காள்! நன்றியற்ற செல்வருக்காக நீங்கள் உடல் வருங்த உழைப்பது என்? தனம் படைத்த அந்த இனம் உங்கள் வேர்வையை வடிக்கும், உங்கள் குருதியைக் குடிக்கும்.

"நீங்கள் விதைக்கிறீர்கள் - அயலான் அறுக்கிறான்.

நீங்கள் நெய்கிறீர்கள் - அயலான் அணிகிறான்.

நீங்கள் ஆக்குகிறீர்கள்-அயலான் அனுபவிக்கிறான்.’’

என்ற பாட்டைப் படிக்கும் பொழுது,

'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீனில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்; விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும் வீணருக்கு உழைத்து உடலம் ஒய மாட்டோம்"

என்ற பாரதியார் கவிதை நம் நினைவிற்கு வருகின்றது.

உண்பதற்குப் போதிய உணவின்றி, உடுப்பதற்கு நல்லுடையின்றி நாள் முழுதும் பாடுபட்டு உடல்ஓய்ந்த உழைப்பாளியின் குரல் நம் நெஞ்சத்தை உருக்குகின்றது.