சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்,
(1934-ல் தொடங்கப்பெற்று உடன் பதிவு செய்யப்பெற்றது)
ஒற்றுமை
சீலம்
தொண்டு
ஆசிரியர் கல்லூரிகளுக்குக்
கலைச் சொற்கள்
அறிக்கை
நமது கலைச்சொற்களும் அரசாங்கமும்
நமது சங்கம் 11-6-1934ல் தோன்றியது; தோன்றிய உடனே பதிவு செய்யப் பெற்று, இருபத்து மூன்றாண்டுகளாகத் தமிழ்ப் பணி புரிந்து வருகின்றது. அன்று தொட்டுக் கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபட்டு, அதற்கென்றே நான்கு பெரிய மாநாடுகள் நடத்தி 1938-ல் “கலைச்சொற்கள்" என்ற நூலைச் சென்னை, திருவாங்கூர் ஆகிய பல்கலைக் கழகங்களின் பொருளுதவி கொண்டு வெளியிட்டது. சென்னை அரசாங்கம் அந்நூலைப் பாராட்டி, மாகாணப் பொதுக் கல்வி இயக்குநர் (Director of Public Instruction) வழியாக (No 45290 B-3-9-11-1938) தமிழ் நாட்டிலுள்ள உயர் பள்ளிகளுக்கெல்லாம் ,அரசாங்கச் செலவில் ஒவ்வொரு படி வாங்கி அனுப்பி, அச்சொற்களை ஆசிரியர்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கணக்கு, அறிவியல், வரலாறு, உடல் நூல் முதலிய பாடங்களையெல்லாம் கற்பிக்க வேண்டும் என்று சுற்றாணை அனுப்பியது. 1946லும் சென்னை அரசாங்கம், நமது சங்கம் குறிப்பிட்ட பெரியார்களைத் தமிழ்க் கலைச் சொல்லாக்கக் கழகத்திற் சேர்த்து, கலைச் சொற்களைத் திருந்த ஆராய்ந்து, முடிவு செய்து வெளியிட்டுத் தமிழ் நாட்டு உயர்நிலைப் பள்ளிகளிலெல்லாம், அவைகளைப் பயன்படுத்தியே பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என்று சுற்றாணை அனுப்பியது. நமது சங்கப் பணிகளின் விளைவாகிய இவ்விரண்டு கலைச் சொற்களையும் அடிப்படையாகக் கொண்டே, இப்போது இலங்கை அரசாங்கம் கலைச் சொற்களை ஆக்கி வெளியிட்டு வருகிறது.
தமிழாட்சிச் சொற்கள்
நமது சங்கம் தமிழில் ஆட்சி நடைபெறுவதற்கு ஏற்ற ஆட்சிச் சொற்களை அமைத்து, 20-12-1956ல் சென்னை அரசாங்கத்தினிடம் ஒப்புவித்தது; முதலமைச்சர் திருவாளர் கெ. காமராசனார் அவர்கள் தங்கள் துணைவர்களாகிய பாதுகாவல் மந்திரி திருவாளர் பக்தவத்சலம் அவர்கள், கல்வி மந்திரி திருவாளர் சி. சுப்பிரமணியம் அவர்கள், அன்றைய மராமத்து மந்திரி சேதுபதியவர்கள் ஆகிய மூவருடனும், சென்னையில் இராசாசி மண்டபத்தில் நடைபெற்ற பேரவைக்கு வந்திருந்து, ஆட்சிச் சொற்கழகத் தலைவர் திருவாளர் சு. வெங்கடேசுவரன் I.C.S., அவர்களிடமிருந்து, சென்னை அரசாங்கத்தின் சார்பாகத் தமிழ் ஆட்சிச் சொற்களை ஏற்றுக்