பக்கம்:ஆடரங்கு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகாத் தியாகம்

97

இறந்துவிட்டது பற்றி ராஜாமணிக்கோ அவன் தகப்பனாருக்கோ ஒன்றும் துக்கம் இல்லை. இருந்து சகிக்க முடியாத கஷ்டங்களை அனுபவித்துக்கொண் டிருப்பதைவிட, அவள் போய்விட்டதே மேல் என்றுதான் இருவருக்கும் தோன்றிற்று. இருந்தாலும் சில சமயங்களில் அந்தப் பெண்ணினுடைய அர்த்தமற்ற வாழ்க்கையை அவர்களால் நினைக்காமல் இருக்க முடிந்ததில்லை.

ராஜாமணி செய்கையற்றுப் போனதற்கெல்லாம் அடிநாளிலிருந்து இதை ஒரு காரணமாகச் சொல்லலாம். அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் அக்கா, வீட்டில் இருந்தாள். தாயின் மரணம் -தொடர்ந்து சகோதரியின் மரணம்! 'என் செயலால் ஆவது இனி ஒன்றும் இல்லை' என்று செயலற்று விட இளம் பிராயத்திலேயே கற்றுக்கொண்டு விட்டான் ராஜாமணி. முடிவு காணாத தத்துவ விசாரங்களைத் தவிர அவனுக்கு வேறு ஒன்றும் கை வரவில்லை.

கிருஷ்ணஸ்வாமி சாஸ்திரிகளின் தம்பிமார்கள் இருவரும் சகல விதங்களிலும் தங்கள் அண்ணாவுக்கும், தங்கள் அண்ணா பிள்ளைக்கும் எதிர்மாறான குணங்கள் உள்ளவர்கள். மூத்தவரைப் பீடித்த மாதிரி குடும்பக் கவலைகள் ஆரம்பமுதலே அவர்களைப் பீடிக்கவில்லை. அவர்கள் அந்தக் குடும்பத்தில் வேர் ஊன்றவே யில்லை என்று கூடச் சொல்லலாம். அவர்கள் வேர் ஊன்றாமலே. முத்தண்ணாவின் செலவில் வளர்ந்து மரமாகிப் பூத்துக் காய்த்தும் விட்டார்கள்.

அவர்கள் வடக்கே வெவ்வேறு இடங்களில் மிகவும் சௌகரியமாக இருந்தார்கள். 'முத்தண்ணா அவர்களில் யாரையாவது பார்ப்பது மாமாங்கத்துக்கு ஒரு முறைதான். முத்தண்ணாவின் குடும்பக் கவலைகளோ கஷ்டங்களோ அவர்களைத் தொடவே இல்லை. யாரோ மூன்றாவது மனுஷனைப்பற்றி நினைப்பது போலத்தான் அவர்கள் முத்தண்ணாவைப் பற்றி நினைத்தார்கள் என்று சொல்வது மிகையாகாது.

க—7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/102&oldid=1523724" இலிருந்து மீள்விக்கப்பட்டது