பக்கம்:ஆடரங்கு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கைப் பந்தயத்தில்

131

பணமுந்தான் அவர்களுக்குக் கிடைத்தன, அந்த நாட்களில் அதாவது 1932, 1933 என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஐயாயிரம் ரொக்கமும் மாதாந்திரப் பென்ஷனும் ஒரே பிள்ளையும் கொண்ட குடும்பங்களைப் பணக்காரக் குடும்பங்கள் என்றுதான் பெருமையுடன் ஊரார் சொல்வார்கள்.

ராஜாவுக்கும் சிவசங்கரனுக்கும் கல்யாணமான இடங்களும் ஏதோ நல்ல இடங்கள்தாம். பரீஷை போய்விட்டது என்றாலுங்கூட இருவருக்குமே கெட்டிக்காரர்கள் என்று பெயர் உண்டு. இருவருமே குமாஸ்தாவாகப் போவது என்கிற ஆசையை விட்டொழித்தவர்கள். யாருக்காவது அடங்கி அடிமைப்பட்டுக் கைகட்டிச் சேவகம் செய்வது தங்கள் சுயமரியாதைக்கு உகக்காது என்று இருவருமே தீர்மானம் செய்து விட்டவர்கள். இருவருமே சுயேச்சையான வாழ்வை விரும்பினார்கள். சிவசங்கரன் ஏதோ சிறு தொழில் செய்வதில் முனைந்தான். ராஜா எழுத்தாளனானான்.

வாழ்க்கைப் பந்தயத்தை அன்றுவரை ராஜாவும் சிவசங்கரனும் ஒரேவிதமான அநுகூல பிரதிகூலங்களுடன் ஒரேவிதமான சாதன சாதனைகளுடன் தொடங்கினார்கள் என்கிற ஞாபகத்துடன் அவர்களுடைய பிற்கால வாழ்க்கையைக் கவனிக்க வேண்டியதாகிறது. காலம் 1933 முதல் 1949 வரை என்றும் கவனத்தில் வைக்கவேண்டும்.

சிவசங்கரன் கையில் அகப்பட்ட, தகப்பனார் கண்ணில் ரத்தம் தெறிக்கக் கொடுத்த முதலை வைத்துக்கொண்டு ஏதேதோ தொழில்கள் செய்தான். சற்றேறக்குறைய ஆறேழு வருஷங்களில் கையிலிருந்த பொருள் பூராவுமோ அல்லது முக்கால்வாசியுமோ கரைந்துவிட்டது. ராஜாவினுடைய நிலைமையுமே சற்றேறக்குறைய அதுதான். ஏழு வருஷங்களில் எழுதிக் குவித்ததெல்லாம் ஆத்ம திருப்திக்குத்தான் உபயோகப்பட்டது. பெயரும் புகழும் கிடைத்திருக்கலாம்; அதுபிற்காலத்தில் பெரு முதலாகப் பலன் தரலாம்? அதுபற்றி நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. பொருளீட்டாமற் சாப்பிட்ட செல்வம் கரைந்துவிட்டது. அதாவது ராஜாவின் தகப்பனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/136&oldid=1524972" இலிருந்து மீள்விக்கப்பட்டது