பக்கம்:ஆடும் தீபம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபம்

103


எவ்வளவு அன்பு இதுக்கெல்லாம் வட்டியும்முதலுமா... இருக்கட்டும் இருக்கட்டும்; இன்னும் பத்து நாளுதானே? அப்புறம் கல்யாணம் ஆன மறுநாளைக்கே...!”

எதையோ நினைத்துக் கொண்ட அல்லி களுக் கென்று சிரித்தாள். அழகுச் சிரிப்பின் மெல்லிய அலைகள் மிதந்து நின்ற தென்றலோடு தேய்ந்து மறைந்தன.

ஓர் இளம் பெண்ணுக்கு, அவளுடைய திருமணச்செய்தி இவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? ஆமாம். அல்லியைப் பார்த்தால் தெரியவில்லையா...?

பத்து நாட்களுக்குப் பின், பங்குனித் திருநாள் ஒன்றில் நடக்க இருக்கும் தன் திருமணத்தை நினைத்து நினைத்துப் பூரித்தாள் அல்லி.

அத்தான், அத்தான்!” என்று அவளது உள்ளம் அடிக்கு ஆயிரம் முறை அருணாசலத்தை அழைத்து அழைத்துக் கொண்டாட்டம் போட்டது.

நேற்றுவரை யாரோ ஒரு ‘அவர் ஆக இருந்த ஒருவன், இன்று படீரென்று தன் இதயம் முழுவதும் எதிரொலிக்கும் அத்தான்’ என்ற பந்தச்சொல்லுக்குப் பாத்தியம் ஆகிவிட்டதை நினைத்தபோது, அவளுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது! காதலின் ஜீவ சக்தி, உணர்ச்சிகளின் இயல்புகளில் மட்டுமல்ல, உயிரின் பாசத்திலே கூட புதுமையை மலர வைத்து விடுகின்றது.

நெருக்கமற்றுக் கிடந்த இரண்டு இதயங்களுக்கு மத்தியில் வாஞ்சைகளின் சிறகுகள் விரிக்கப்படும்போது, எல்லாவற்றையும் கடந்த ஒரு பிணைப்பு-எல்லா உணர்வுகளையும் ஊடுருவிய ஓர் இணைப்பு நிகழ்ந்துதான் விடுகிறது. இந்தச் சங்கமத்திற்குப்பெயர்தான் காதலா? ஆமாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/104&oldid=1317197" இலிருந்து மீள்விக்கப்பட்டது