பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



98

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

வில்லை முருகன். 'கேட்கிறபடி இருந்து கேட்டால் சொல்லுவோம்', என்று அமுத்தலாகவே கூறுகிறான்.

பார்த்தார் சிவபெருமான் வேறு வழியில்லை. தன் பிள்ளையின் காலடியிலே சிஷ்யனாக அமர்ந்து, கை கட்டி வாய் பொத்தி, பிள்ளை மூலமாகவே பிரணவ மந்திர உபதேசம் பெறுகிறார். இப்படித் தான் 'குருவாய் அரனுக்கும் உபதேசித்தான் குகன்' என்பர் அறிஞர்கள். இந்த ஞானபண்டிதன்தான், சுவாமிநாதன் என்ற பெயரோடு அந்தப் பழைய ஏரகம் - இன்றைய சுவாமி மலையில் இருந்து, தன் தந்தைக்கு மாத்திரம் அல்ல, உலகில் உள்ள மக்கள் எல்லோருக்குமே, ஞான உபதேசம் செய்து கொண்டிருக்கிறான்.

இதில் ஒரு வேடிக்கை - ஞானப்பழமாக நிற்கும் பழநியாண்டவனும், ஞான பண்டிதனாக விளங்கும் சுவாமி நாதனும், கோவணாண்டியாகவே நிற்கின்றனர். கையில் தண்டு ஒன்றை மட்டும் ஏந்திக் கொண்டு, ம்ற்றைய உடைமைகளை எல்லாம் துறந்து விடுகிறார்கள், சின்னஞ்சிறு பிள்ளையாக இருக்கும்போதே. ஏன் இப்படி இந்த இரண்டு மூர்த்திகள் மட்டும் முற்றும் துறந்த முனிவர்களாக இருக்கிறார்கள் இந்த இளவயதிலேயே?’ என்று கேட்டேன் பலரிடம்.

இந்தக் கேள்விக்கு விடைதேடிப் புரட்டினேன், பல புத்தகங்களை. விடை கிடைப்பதாக இல்லை. விளையாட்டாகச் சொன்னார் ஒரு பக்தர் ஒரு மனைவியே சற்று ஏறுமாறாய் இருந்தால் சந்நியாசம் கொள்ள வேண்டியது தானே; ஒன்றுக்கு இரண்டு மனைவியர் என்றால் ஒருவரிடமும் கூறாமல் சந்நியாசம் கொள்வதைத் தவிர வேறு வழி என்ன?’ என்று.