பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

103

வஞ்சி போல் மருங்குலார் மாட்டு
யாவரே வணங்கலாதார்

என்பது பாட்டு. உண்மைதானே. இந்த நில உலகில் எந்த ஆடவன்தான் பெண்மைக்கு அடங்கி, ஒடுங்கி, வணங்கி வாழாதவனாக இருக்கிறான்? அப்படி ஆடவரை அடிமை கொள்ளும் பெண்கள் நீண்டு வளர்ந்த கொம்புகளை வளைத்துப் பிடிக்க வேண்டியதுதான். அந்தக் கொம்புகளும் அவர்கள் இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுத்து அவர்கள் காலடியிலேயே மலர்களைச் சொரிந்து விடுகின்றனவே. இப்படி ஒரு காட்சி கவிஞன் கண்ணுக்குத் தோன்றுகிறது.

இந்தக் காட்சியே கல்லுருவிலும் என் கண்ணுக்குத் தோன்றுகிறது. தமிழ் நாட்டுக் கோயில்களில் பல விஜய நகர நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டவை என்பது பிரசித்தம். அப்படிக் கட்டப்பட்ட கோயில் வாயில்களில் எல்லாம் கல்லால் ஆகிய நிலைக்கதவுகளின் அடித்தளத்தில் இரண்டு பக்கங்களிலும், இரண்டுபெண்கள் கொடியடியில் நிற்பதைக் கண்டிருக்கிறோம். அவர்கள் தங்கள் தலைக்கு மேல் வளைத்துச் சுற்றியிருக்கும் கொடியே மேலும் மேலும் வளர்ந்து வளைந்து வாயிலின் முகடு வரை சென்றிருப்பதையும் கண்டிருக்கிறோம். இவ்விதம் கொடியடியில் நிற்கும் மடக்கொடிகளாய் நிற்பவர்களையே 'விருஷிகர்' என்று இலக்கியங்கள் பேசுகின்றன.

இப்படி கொடியும் கொம்பும் ஆக நிற்கும் பெண்களையே மகாபாரதத்தில் விருக்ஷிகா, விர்த்திகா, விர்க்ஷி என்று கூறப்பட்டிருக்கிறது. இவர்களையே சமஸ்க்ருத இலக்கியங்கள், சலபாஞ்சிகைகள் என்று அழைக்கின்றன. பாணரது ஹர்ஷ சரிதம் இந்த சலபாஞ்சிகைகளை,கல்-