பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

தத்துவத்தை உணர்த்தி நிற்கின்றன. தமிழகத்தை அப்படியே கையில் எடுத்துக் காட்டும் ஒவ்வொரு கோயிலும். தமிழ் மக்களின் வாழ்க்கை, பண்பாடு, கலை, நோக்கம், உணர்வு, போக்கு வரவு அவ்வளவும் கோயிலின் கருங்கற்களுக்குள் பத்திரமாய்ப் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. மெய்யுணர்வின் மூலமாகக் கோயில்களையும், கோயில்களின் கலைப் பொக்கிஷங்களையும் ஆராய்ந்து, அனுபவித்து, பிறரும் அனுபவிக்கும்படி, அற்புத இலக்கியங்களாக வடித்தெழுதியிருக்கிறார்கள் தொண்டைமான்.

தமிழர்கள் எல்லோரும் கண்ணைத் திறந்து அதிசயித்துப் பார்த்தார்கள். அருமை நண்பர், நீதிபதி மகராஜன் சொன்னார், "கோயில்களைப் பற்றி எழுதி, அவற்றுக்கு ஒளியும், உயிரும், பொலிவும் கொடுப்பதற்கென்றே அவதரித்தவர் பாஸ்கரன்" என்று. நீதிபதியின் தீர்ப்புக்கு அப்பீல் ஏது?

தொண்டைமான் நூல்களை தமிழ் மக்கள் அனைவரும் படிக்க வேண்டும். படிக்கப் படிக்க மனம் தூய்மை பெறும். பக்தி கலை உணர்வு, இப்படி எழுதினவர், வாசிக்கிறவர் எல்லோரையும் பரவசப்படுத்தும் தொண்டைமான் நூல்கள். அது போதாதா நமக்கு?