பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126 ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்


மக்கள் உடம்பிலும் இந்த மின்சார சக்தி பரவியிருக்கிறது என்பதும். இதுவே உயிர் உடம்போடு ஒட்டிக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்றும் இன்றைய உடல் நூலார் கூறுகிறார்கள்.

இவ்வாறு உருவத்தாலும், சக்தியினாலும் இரண்டு தன்மைகள் ஒன்றாய்ச் சேர்ந்து இயங்குவதை எத்தனையோ ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாலேயே கண்டிருக்கிறார்கள் நம் முன்னோர். உலகெல்லாம் இறைவன் திரு உருவம் என்கிறார்கள். பார்க்குமிடங்களில் எல்லாம் அவன் பசிய நிறத்தையும், கேட்கும் ஒலியிலெல்லாம் அவன் கீதத்தையும் கேட்டவர்கள், சராசரங்கள் அத்தனையிலும் இறைவனுடைய திருவுருவத்தையே கண்டார்கள். உலகெல்லாம் அவன் தானும் தன் தையலுமாய் நின்ற தன்மையை விளக்கவே அவனை மாதிருக்கும் பாதியனாக அர்த்தநாரியாகக் கற்பனை பண்ணியிருக்கிறார்கள். கதை இது தான்.

பிருங்கி என்று ஒரு முனிவர், அவர் இறைவனிடத்து இடையறாத அன்பு பூண்டவர். அவர் கயிலாயத்துக்கு வருகிற பொழுதெல்லாம் இறைவனை மட்டுமே வலம் வருவார். பக்கத்தில் இருக்கும் பார்வதி தேவியைப் பார்ப்பதும் இல்லை. அவளையும் சேர்த்து வலம் வருவதும் இல்லை. அவள் தன் கடைக் கண் நோக்குக்குத் தவம் கிடப்பது மில்லை. இது அம்மைக்கு அவமான மாகப்பட்டது. அவன் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டாள் தனக்கும் அவர் உடலில் ஒரு பாதி கொடுக்க வேண்டும் என்று. உள்ளத்தால் ஒன்றிய இருவரும் அன்று முதல் உருவத்திலும் ஒன்றி நின்று ஓருருவில் காட்சி கொடுக்க ஆரம்பித்தார்கள்.