பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறியாதார் அறியாதார்

ன்று ஒருநாள் நான் கோயிலுக்குப் போயிருந் தேன். கோயில், கவிச்சக்கரவர்த்தி பிறந்த ஊராகிய தேரழுந்துாரில் உள்ள ஆமருவியப்பன் கோயில்தான். நல்ல மாலை நேரம், உத்சவகாலம் வேறே. ஆதலால் கோயிலுக்கு வருவார் தொகை அதிகமாகவே இருந்தது. ஒவ்வொருவரும் கையில் தேங்காய், பழம், புஷ்பம், கற்பூரம் எல்லாம் நிறைந்த தட்டுகளை ஏந்திச் சென்றனர்.

புஷ்பக் கடையில் நுழைந்து அழகான மாலைகளைக் கட்டி வாங்கிக் கொண்டு போனவர் பலர். அலங்காரப் பிரியர் அல்லவா பெருமாள். நானும் அவர்களுடன் சேர்ந்து தேங்காய், பழம், புஷ்பம் எல்லாம் வாங்கிக் கொண்டுதான் சென்றேன். என்னை அடுத்து ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

அவர் நல்ல பக்தி சிரத்தை உள்ளவராகக் காணப் பட்டார். ஆனால் வீசிய கையும், வெறுங்கையுமாய்த் தான் வந்தார் அவரைப் பார்த்துக் கொண்டேதான் நடந்தேன் கோயிலுக்குள். இருவரும் பெருமாள் சந்நிதிக்கு வந்து சேர்ந்தோம். என் கையிலிருந்த தட்டை அர்ச்சகர் வாங்கிக் கொண்டார். பெருமானின் திவ்ய ரூபத்தைக் கண்டவுடன், அவனது கம்பீரமான தோற்றத்தைப் பார்த்தவுடன் நாராயணா நாராயணா என்று கைகூப்பித் தொழுதேன் நான். என்பக்கத்தில் வந்து நின்ற அந்த நண்பரோ கல்லுளி மங்கன் மாதிரி நின்று கொண்டிருந் தார். பெருமானைத் தொழுவதற்குக் கூட அவர் கை எழக் காணோம்.