பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



146

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

மறை நான்கும் ஆனாய்
       ஆறங்கம் ஆனாய்
பொன்னானாய் மணியானாய்
       போகம் ஆனாய்

என்று எவ்வளவோ திட்ட வட்டமாகத்தான் இறைவனைச் சுட்டிக் காட்ட முற்படுகிறார். என்றாலும் இறைவன் தன்மையை நினைந்த உடனே அது என்ன அவ்வளவு எளிதாகச் சொல்லிவிடக்கூடிய ஒன்றா என்று மயங்குகிறார்.

பூமிமேல் புகழத்தக்க
       பொருளே உன்னை
என்னானாய் என்னானாய்
       என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி
       ஏத்து கேனே

என்றுதான் அவரால் முடிக்க முடிகிறது. என்னானாய் என்னானாய் என்று சொல்வதில்தான் எத்தனை அழகு. எவ்வளவு பெரிய உண்மை அடங்கிக்கிடக்கிறது. அறியேன், அறியேன் என்று இவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் அறியாமையையையா வெளிப்படுத்துகிறார்கள்? இல்லை. அந்த அறியாமைக்குள் அல்லவா அடங்கிக் கிடக்கிறது அவர்களது அறிவுடைமை. இதை அறியாதார் எல்லாம் அறியாதாரே!

கம்பன் போன்ற மகாகவி, அப்பர் போன்ற சிறந்த பக்தர்கள் பாடல்களை யெல்லாம் பாடப் பாட நாம் அடைகின்ற இன்பங்கள் எத்தனை எத்தனையோ. கம்பன் கவிதையை அறிதோறும் அறிதோறும் நம் அறியாமையையே அறிகிறோம். அவன் கவி நயமோ அன்று இருந்ததுபோல் இன்று இருப்பதில்லை. இன்னே