பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



164

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

கூறினேன் நான். இதற்கெல்லாம் சளைத்தவராக இல்லை பெரியவர். அங்குமே அவர்,

மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளோடும் பாடி
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடுபடாமல் ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்.
வரிக்குயில் பேடையோடாடி வைகி வருவன கண்டேன்.
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்.

என்றெல்லாம் பாடினார். அவர் பாடப்பாட என் முன் தவழும் இயற்கை, உலக நியதி எல்லாம் ஆண் பெண் என்ற இரண்டு தத்துவத்துக்குள்ளே அடங்குவதாகக் கண்டேன். இந்த இரண்டு தத்துவங்களும் தனித்தனி இயங்காமல் இணைந்து இணைந்து செல்வதால் தான் உலகமே உய்கிறது என்றும் கண்டேன்.

Nothing in this world is single All things by a law Divine in one another mingle

என்றெல்லாம் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி பாடியதின் உண்மையும் அப்போது விளங்கிற்று. அர்த்தநாரி தத்துவத்தின் அருமையையும் அறிந்தேன். அது இயற்கை நியதியை எவ்வளவு அழகாகக் காட்டுகிறது என்பதையும் தெரிந்தேன். இந்த உண்மைகளையெல்லாம் தெரிவதற்கு அவன் அருளைக் கண்ணாக மட்டுமல்ல, காதாகவும், ஏன் அறிவாகவுமே கொண்டிருக்க வேண்டும் என்றும் கண்டு கொண்டேன்.

கோயிலின் வெளிப் பிராகாரத்தைச் சுற்றிய நாங்கள் அதன் பின் உட்பிராகாரத்துக்குள்ளேயே நுழைந்தோம்.