பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

இத்தகைய அறிவு, உணர்வு, அனுபவம் எல்லாம் பெற்ற பின் பெரியவரைத் தொடர்ந்தே கோயிலின் உட்பிராகாரத்தின் வடக்குப் பிராகாரத்திற்கு வந்தேன். அங்கே ஒரு சந்நிதி. நடராஜர் சந்நிதிதான். ரொம்பவும் அருமையாக அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஆட வல்லான், அம்பிகை சிவகாமியுடனும், பக்தன் மணி வாசகனுடனும் கோயில் கொண்டிருந்தான்.

எனக்கு எப்போதுமே நடராஜர் என்றால் அலாதி பக்தி. கலை உலகின் அற்புதம் அந்த வடிவம். உருவமில்லாத கடவுளுக்கு, சிந்தனை செய்யும் கலைஞன் கற்பித்துக் கொடுத்த முதல் உருவமல்லவா அது! அணுவுக்குள் அணுவாய், ஊனாயும், உயிராயும், உணர்வாயும் உள்ளும் புறமும் இருந்து இயங்குகிறான் இறைவன், அவன் ஆட்டுகின்றபடியே அண்டங்கள் எல்லாம் ஆடுகின்றன. அப்படி அண்டங்களையெல்லாம் ஆட்டுகின்றவன், தானும் ஆடிக்கொண்டேதான் ஆட்டு கின்றான் என்ற உண்மைகளை யெல்லாம் உள்ளடக்கிய அற்புத தத்துவ தரிசனத்தை அல்லவா அந்தச் சிலை உருவிலே காண்கிறோம் நாம். ஆதலால் நடராஜர் சந்நிதி முன்பு, பெரியவர் தூண்டுதல் இல்லாமலேயே என் கை குவிந்தது, தலை தாழ்ந்தது. இதை பெரியவர் பார்த்தார். "பையன் பரவாயில்லை" என்று நினைத்துக் கொண்டார். பாடினார்.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால் வெண்ணிறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

அவர் பாடிய பாட்டை மெய்மறந்து நின்று கேட்டேன். அதன் பின் உண்மை விளங்கிற்று. மனிதப் பிறவி எடுத்த ஞானிகள் பக்தர்கள் எல்லாம் பிறவிப்