பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



66

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

இடக்கையைத் தாழ்த்தி ஏதோ பரத நாட்டியம் ஆட முடியாது நிற்கும் கோலத்தைச் சொல்வதா? இன்னும் வலது காலை அழுத்தமாக ஊன்றி இடது பிட்டியை வளைத்து நிற்கும் அவளது ஒயிலைச் சொல்வதா? எதைச் சொல்லுவதென்றே தெரியவில்லை. அத்தகைய அழகிய வடிவிலே நிற்கிறாள் அவள்.

தோளையே சொல்லுகேனோ
சுடர் முகத்து உலவு கின்ற
வாளையே சொல்லுகேனோ
அல்லவை கேனோ
மீளவும் திகைப்பதல்லால்
துளித் துளி விளம்பல் ஆற்றேன்

என்று சீதையை வர்ணிக்க முனைந்த கவிச் சக்ரவர்த்தி கம்பன் எப்படிக் கையை விரிக்கிறானோ அவனைப் போலவே நானும் கையை விரிக்க வேண்டியிருக்கிறது. சொல்லால் உருவாக்கி நிறுத்த முடியாது போய் விடுகிறது. ஆனால் கவிஞனுக்கு புகைப்படக் கலைஞனான எனக்கோ அவ்வடிவினை அப்படியே படம் பிடித்து உங்கள் முன் நிறுத்த முடிகிறது.

ஒரு மகள் தன்னை உடையோன்
உலகம் நிறைந்த புகழால்
திரு மகள் போல வளர்த்தேன்
செங்கண் மால்தான் கொண்டுபோனான்

என்று ஏங்குகிறாரே, பெரியாழ்வார், அந்தத் திருமகளை, இங்கல்லவா கொண்டு வைத்து ஒளித்து வைத்து நமக்கு இத்தனை அலைச்சலைக் கொடுத்து விட்டார்கள் என்றாலும் கோதையின் கோலம் கண்ட பெருமிதத்தில் ஒரு வெற்றி நடையே போட்டுத் திரும்பினேன் நான்.