பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

71

இப்படி மூன்று அன்னையரை உருவாக்கிய அவன் மூவரையும் ஒருவராகவே காணும் பேற்றுக்குத் தவம் கிடந்திருக்கிறான் இப்படி மூவரும் ஒர் உருவாய் இணைந்து நிற்கும் அன்னையே தேவர் மூவர்களுக்கும் முதற் பொருள். அவர்கள் செய்யும் முத்தொழிலுக்கும் அடிகோலியவளும் அவளே, அவனே பராசக்தி என்றெல்லாம் எண்ணியிருக்கிறான்.

இப்படி எண்ணியவன் உள்ளத்திலே

மூவர்க்கும் முதற் பொருளாய்
முத்தொழிற்கும் வித்தாகி
நாவிற்கும் மனத்திற்கும்
நாடறிய பேரறிவாய்
தேவர்க்கும் முனிவர்க்கும்
சித்தர்க்கும் நாகர்க்கும்
யாவர்க்கும் தாயாகும்
எழிற் பரையை வணங்குவாம்

என்ற பாடல் எழுந்திருக்கிறது. இந்தப் பராசக்தியாம் அன்னை தான், எண்ணற்ற திருப்பெயர்களோடு எழில் நிறைந்த எத்தனையோ திருவுருவங்கள் தாங்கி நாட்டில் உள்ள கோயில்களில் எல்லாம் எழுந்தருளியிருக்கிறாள். திருநெல்வேலியில் அவளை வடிவன்னை என்பர். மதுரையில் அங்கயற்கண்ணியென அவள் நிற்பாள்.

ஆனைக்காவில் அகிலாண்ட நாயகியாக நிற்பாள். தஞ்சையில் பெரிய நாயகியாகவும், குடந்தையில் மங்களாம்பிகையாகவும், திருக்கடவூரில் அபிராமியாகவும் நிற்கிறாள். இன்று காஞ்சியில் காமாட்சியாகவும் காசியில் விசாலாட்சியாகவும் இருப்பவளும் அவளே தான்.

இவர்களில் கலை உலகில் பிரசித்தி பெற்ற ஒரு சிலரை அறிமுகப்படுத்துவதே இக்கட்டுரையாளரின் நோக்கம்.