பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

79

இறைவனை ஆயிரம் திருநாமம் சொல்லி தெள்ளேணம் கொட்டினான் கவிஞன். வாழ்விலே தான் கண்ட அனுபவங்களை எல்லாம் இறைவனுக்கும் ஏற்றி, அவனும் அதே அனுபவங்களைப் பெற்றவன்தான் என்று கட்டுரைத்தான் மனிதன். புல்லாய், பூண்டாய், புழுவாய், பறவையாய், பல் மிருகமாய் மனிதனாய் வளருகின்ற உயிர்த் தோற்றத்தை அறிந்த அறிஞன், இறைவன் மீனாய், ஆமையாய், பன்றியாய், சிங்கமாய், வாமனனாய், மனிதனாய், ராஜ தந்திரியாய் வளர்கின்றான் என்று கற்பனை பண்ணுகிறான்.

அதனால் காத்தற் கடவுள் தச அவதாரம் எடுக்க வேண்டியிருக்கிறது. இவன் நற்சிந்தையில், அறுபத்திநாலு திருவிளையாடல்கள் இறைவன் செய்தான் என்றும், அதே போல அறுபத்து நாலு மூர்த்தங்களாக உருவாகிறான் இறைவன் என்றும் கூறி வந்ததற்குத் தான் எவ்வளவு கற்பனை வேண்டும். எண்ணங்கள் விரிவாக விரிவாக அறுபத்தி நாலு, அறுபத்தி நாலு ஆயிரமாக உயர்ந்து கொண்டே போனாலும் வியப்பு இல்லைதான்.

சும்மா உட்கார்ந்திருந்தால் சுகாசன மூர்த்தம் என்பான். ரிஷபத்தில் ஏறிச் சவாரி செய்தால், ரிஷபாருடன் என்பான். கட்டிய மனைவி பக்கத்தில் இருந்தால் உமா மகேஸ்வரன் என்பான். இருவருக்குமிடையே கந்தன் புகுந்தால் சோமாஸ்கந்தன் என்பான். கங்கையைத் தரித்தால் கங்காதரன். பிகூஷைப் பாத்திரம் ஏந்தி நடந்தால் பிக்ஷாடனன். இல்லை எழுந்தே கூத்தாடினால், ஆனந்த நடராஜன் என்பான். இப்படி எத்தனை எத்தனையோ மூர்த்தங்களில் இறைவனை கண்டு தொழத் தெரிந்து இருக்கிறான் மனிதன். மனிதனது சிந்தனையில் இப்படி