பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

பக்கபலமாக இருக்க அதற்கேற்ற நிலையில் காலும், உடலும் இடையும் கழுத்தும் துவள, ஒய்யாரமான ஒயிலுடன் நிற்கிறாள் பார்வதி. இத்தகைய அழகியைத் துணையாகப் பெற்ற இறைவன் நடையில் ஒரு மிடுக்கும் காண்பதில் அதிசயம் இல்லை தான். அரையில் கட்டிய அரைக்கச்சும், தோளில் அணிந்துள்ள வாகு வலயமும், மார்பினில் இலங்கும் யக்ஞோப வீதமும், அவர் அழகை அதிகப்படுத்துகின்றன என்றாலும் அவருடைய காம் பீர்யத்தைத் தலையில் அமைந்திருக்கும் கிரீடமே காட்டு கிறது.

மணக்கோலத்தில் இருக்கும் இந்த நாயகி நாயகன் நல்ல செல்வந்தர் என்று தெரிகிறது. இல்லாவிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிறந்த அணிகள் இவர்களுக்கு எங்கே கிடைக்கப் போகிறது.

தங்கையின் திருமணத்தில் தமையனுக்கும் ஒரு சிறந்த இடம் கிடைத்து விடுகிறது. அவனும் வந்து விடுகிறான். தன் மனைவி சீதேவியுடன். பார்வதிக்கு நல்ல திருமணத் தோழியாக அவள் அமைந்து விடுகிறாள். தன் இடக் கையால் மைத்துணியைத் தழுவும் நிலையில் இருந்தாலும் புது மணப்பெண் ஆயிற்றே, நேரே பார்த்தால் நாணுவளே என்று தன் முகத்தை ஒரு பக்க மாகத் திருப்பிக் கொள்கிறாள், இந்த சீதேவி. அவளுக்குமே நாணம் வந்து விடுகிறது