பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிற்ப வடிவில் ஒரு நாடகம்

தாருகாவனம் என்று ஓர் இடம். அங்கே முனிவர் பலர் தவம் செய்கிறார்கள். கலைகளைக் கற்கிறார்கள், வேதங்கள் ஓதுகிறார்கள், யாகங்கள் செய்கிறார்கள். இதனால் எல்லாம் சிறந்த அறிவையும் பெறுதற்கரிய சித்திகளையும் பெறுகிறார்கள். அறிவோடு வளர்கிறது ஆணவம், தம்மை ஒப்பாரும் தமக்கு மிக்காரும் இல்லை என்ற கர்வமும் அதிகம் ஆகிறது. அதனால் இறைவனைப் பழிக்கிறார்கள்; உதாசீனம் செய்கிறார்கள். இவர்கள் கர்வத்தைக் குலைத்து ஆணவத்தை அடக்கி ஆட்கொள்ளப் புறப்படுகிறார் சிவபெருமான், உடன் புறப்படுகிறார் மகா விஷ்ணுவும்.

கங்காளன் உருவில் கையில் டமரு முகத்தைக் கொட்டி முழக்கிக் கொண்டு, தாருகாவனத்திற்கே வந்து விடுகிறார் சிவபெருமான். மோகனமான மோகினி உருவில் விஷ்ணுவும் பின் தொடர்கிறார். இந்த ஆணழகன் ஆட வல்லானைக் காண வருகிறார்கள் அங்குள்ள ரிஷி பத்தினிகள் எல்லாம். அவ்வளவுதான். அன்னம் இட அகப்பையோடு வந்த அரிவையர் எல்லாம் அழகைக் கண்டு மயங்கி நின்று நிறை அழிகின்றனர். மோகினியைத் தொடர்ந்த முனிவர்களது கதையும் அதேதான்.

அறிவையும், தவ வலிமையையும் இழந்து பின் தொடருகிறார்கள். இவர்கள் ஆணவம் எல்லாம் அழிகிறது, இவ்விருவர் வருகையால். இப்படி ஒரு கதை. கதை நல்ல நாடகம் நடிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது.