பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்டறியாதன கண்டேன்

ண்டகாரண்யத்தில் பஞ்சவடியிலிருந்து சீதையை ராவணன் அபகரித்துப் போய் விடுகிறான். சீதையைத் தேடி ராமனும் லகஷ்மணனும் காடும் மலையும் கடந்து வருகிறார்கள். இவர்களைச் சொல்லின் செல்வனான அனுமன் எதிர்கொண்டு அழைத்து, அவனுடைய அரசனான சுக்ரீவன் இருக்கும் மலைப்பக்கம் இட்டுச் செல்கிறான். சுக்ரீவன் துரத்திலே வருகின்ற ராமனையும் லகஷ்மணனையும் பார்க்கிறான். முதல் முதல் அவனுக்கு இருவரது அழகுதான் தென்படுகிறது. புண்டரீகங்கள் பூத்து புயல் தழிப் பொலிந்த திங்கள் மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரிபோல் இருந்த இருவரையும்தான் முதலில் காண்கிறான்.

அந்த மரகதக் கிரிகளையே கொஞ்சம் உற்று நோக்குகிறான். அதன் பின் அப்போது தெரிகிறது அந்த அழகுக்குப் பின் அமைந்து கிடக்கும் அவர்கள் வீரம். 'வீரராய் விளைந்த அவ்விருவரையும் இன்னும் கொஞ்சம் கூர்மையாகவே சுக்ரீவன் நோக்கிய பிறகு விளங்கிற்று அவனுக்கு இவர்கள் அழகிய வீரர்கள் மட்டுமல்ல, 'அமரர்க்கெல்லாம் தேவராம் தேவர்கள்' என்று. அவர்களது தெய்வத் தன்மையை தேறி உணர்ந்த பின், மானுடராக அல்லவா இவர்கள் மாறி இப்பிறப்பில் வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறான்.

ஆறுகொள் சடிலத்தானும், அயனும்
என்று இவர்களாதி