பக்கம்:ஆண்டாள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

ஆண்டாள்

வணங்குகின்றனர். திருவிக்கிரமவதாரம் எடுத்த திருமால் தன்னைத் திருமணத்தில் மணாட்டியாகக் கொள்ள வேண்டும் என்று வேண்டி மன்மதனை வணங்கி நிற்கிறார் கோதையார்.

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்
கட்டி யரிசி யவலமைத்து,
வாயிடை மறையவர் மந்திரத்தால்
மன்மத னே! உன்னை வணங்குகின்றேன்.
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக ளாலென்னைத் தீண்டுவண்ணம்
சாயுடை வயிறுமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே26

கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் கோதை என்று பிறர் பேச, அப்பெரும்பேற்றினைத் தனக்குத் தருமாறு" வேண்டி நைகின்றார் ஆண்டாள். இதன் பொருட்டே நோன்பு நோற்ப தாகவும். எனவே அந்நோன்பிற்கிரங்கி அருள் செய்ய வேண்டும் என்றும் வாதாடுகின்றார் அணியரங்கன் நெஞ்சிற் புகுந்த கோதை பிராட்டியார்.

மாசுடை யுடம்பொடு தலையுலறி
வாய்ப்புறம் வெளுத்தொரு போதுமுண்டு.
தேசுடைத் திறலுடைக் காமதேவா!
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்,
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்
பெண்மையைத் தலையுடைத் தாக்குவண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்
என்னுமிப் பேறென் கருளுகண்டாய்27

இவ்வாறு நாச்சியார் திருமொழியின் முதற்பத்து முழுவதும் இரக்கக் குறிப்பினைத் தோற்றுவதாய், காமதேவனை வேண்டும் போக்கினைக் கொண்டதாய், திருமாலை நைந்துருகி வேண்டி நிற்பதாய் அமைந்திருக்கக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/134&oldid=1462136" இலிருந்து மீள்விக்கப்பட்டது