பக்கம்:ஆண்டாள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

167


கேட்டால், இதுவே உயர்கவிதை எனக் காட்டக் கூடிய தகுதியும் கீர்த்தியும் வாய்ந்த கவிதை எனலாம். மேலும் கோதையார் தாம் கண்ட கனவிலே நாராயணன் நம்பியைக் கைப்பிடித்ததாகக் கழறுகிறார். அக்காலத் திருமண முறைறையும் ஒருங்கே ஒழுங்காகக் குறிப்பிடும் போக்கில் இப்பாடல்கள் அமைந்திருக்கக் காணலாம்.

உயிர்த்தோழி ஒருத்தியிடம் தான் கண்ட கனவினை ஆண்டாள் உரைக்கும் போக்கில் ஆறாந் திருமொழி அமைந்துள்ளது.

"என் உயிர்த்தோழியே! ஆண்குலத்தினில் உயர்ந்த குணங்கள் கொண்டவனான நம்பியாம் நாராயணன், ஆயிரம் யானைகள் சூழ்ந்துவர, வலமாக நடக்கின்றான் என்று எதிரே பொன்னாலான பூரண கும்பங்களை வைத்துப் பட்டணம் முழுவதும் தோரணங்கள் கட்டியிருக்க நான் கனாக் கண்டேன்.

வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்.
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழிநான்102

"தோழியே நாளைக்குத் திருமணம் என்று உறுதிசெய்து, பானைகளோடு கூடின பாக்கு மரங்களாகிய அலங்காரங்களையுடைய மணப்பந்தலின் கீழே, நரசிம்மனென்றும் மாதவனென்றும் கோவிந்தனென்றும் திருப்பெயர்கள் பூண்ட ஒரு காளையானவன் உள்ளே நுழைய நான் கனாக் கண்டேன்."

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
வாளைக முகுப ரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான் ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழிநான்103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/169&oldid=1462170" இலிருந்து மீள்விக்கப்பட்டது