பக்கம்:ஆண்டாள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஆண்டாள்


சூடிக்கொடுத்த நாச்சியார் இறைவன் பணித்த வண்ணமே கோதை சூடிய மாலை அன்றிலிருந்து அவனுக்குச் சூட்டப்பட்டது. தம் மகளார் கோதை திருமாலின் தேவியாரோவென்று பெரியாழ்வார் ஐயுற்றார். தாம் வளர்த்த பொற்கொடியின் பொற்பினை உன்னி உன்னி உள்ளம் உருகினார். தாம் பிறந்த தன் பயனை அன்றே அடைந்ததாய் ஆனந்தம் அடைந்தார். "என்னை ஆண்டாள் இவளே" எனத் தம் மகளிடம் இயம்பி, உச்சி மோந்தார். நடந்த நிகழ்ச்சிகளை மகளார்க்கு விவரித்தார். அப்போது கோதையாரும் பரமன் தம்மாட்டுக் கொண்டுள்ள ஆர்வத்தை அறிந்தார்: அருளை உணர்ந்தார்: உணர்ந்ததன் பயனாய் உவகை கொண்டார்.

ஊரெல்லாம் இச்செய்தி காற்றினும் கடுகிப் பரவியது. ஊரிலுள்ளோர் யாவரும் வடபத்திரசாயிப் பெருமானை வாழ்த்தி வணங்கினர். இறைவனைப் பரவும் ஒலியே எங்கும் நிறைந்தது. இச்செயல்கள் ஆண்டாளுக்கு மகிழ்ச்சியையும், அதே நேரத்து ஆற்றாமையையும் வளர்ந்தன. சான்றோர் இவரைச் 'சூடிக் கொடுத்த நாச்சியார்' 'குடிக்கொடுத்த சுடர்க்கொடியார்' எனப் போற்றினர், அதிலிருந்து அப்பெயர் நின்று நிலவுகின்றது. அந்த நீள் பெயர் வழங்கு கின்றது.

வாழ்வின் மாற்றம்

பெரியாழ்வார் 'பெருமைமிகும் ஆண்டாளைப் பெற்ற பிரான்' ஆனார். 'தொடைசூடிக் கொடுத்தாளைத் தொழுமப்பன்' எனப்பட்டார். அதனால் ஆழ்வார் நாள்தோறும் அருமை மகளாரைப் பெருமையோடு ஆடை அணிகளால் ஒப்பனை செய்து, மாலைகளையும் சூட்டி அழகு பார்த்தார். அவ்வாறு அழகு பார்க்கும் போதெல்லாம் ஆண்டாளை ஆண்டவனோடு ஒக்க வைத்து நோக்கும் உணர்வு அவரை ஆட்டிப் படைத்தது. "இவள் செப்பமுடைமை நோக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/42&oldid=957511" இலிருந்து மீள்விக்கப்பட்டது