பக்கம்:ஆண்மை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்மை

15

அவள்தான்.

விதியும், கோழை சீமாவின் மேல், கருணை கூர்ந்தது போல், அவளை அனுப்பியது.

பால் போன்ற நிலாதான்.

சிற்றாடை கட்டிக் கொண்டு, சில சமயம் சீமாவென்று கூப்பிட்டு, பின்னோடு அலைந்து கொண்டிருந்த ஒரு குழந்தை, திடீரென்று பதினான்கு வயது நங்கையாக, அதிலும் அழகியாக மாறியதைக் கண்டால், யாருக்குத்தான் அந்த மங்கிய நிலவில் அடையாளம் கண்டு பிடிக்க முடியும்?

அவள் தன்னைக் கடந்து செல்லும் வரை, கூர்ந்து கவனித்தான். உள்ளம் அவள்தானென்று காரணமற்றுக் கூறியது. ஆனால், அவள் ஜாடையெல்லாம்… மெதுவாகப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால்… நம்பிக்கை யாரை விட்டது?

“ருக்மிணி!”

அந்தப் பெண் திடுக்கிட்டு நின்றாள்.

“ருக்மிணி!”

வந்தவள் ருக்மிணிதான். தன் பெயரைக் கூப்பிடக் கேட்டதும், பயம். வாயடைத்த பயம். ஆனால், குரல் ஜாடை எல்லாம் இரண்டாம் முறை சப்தத்தில், யாருடையது மாதிரியோ பட்டது.

“ருக்மிணி!” என்றான் மறுபடியும். சற்றுத் தைரியமாக. “யாரது?” என்றாள்.

“நான்தான் சீமா!”

வார்த்தைகளைக் கேட்டதும், அவள் உள்ளத்தில் தாங்க முடியாத குதூகலம்; அதில் பிறந்த சோகம், கண்களில் ஜலம் தாரை தாரையாகப் பொங்கியது. அழ வேண்டுமென்றிருந்தது. சிரிக்க வேண்டுமென்று தோன்றியது. கண்டத்தில் ஏதோ ஒன்று கட்டியாக உருளுவது போல் இருந்தது. உதடுகள் அழ வேண்டுமென்று துடித்தன. உதட்டை மெதுவாகக் கடித்துக் கொண்டு விழுங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/16&oldid=1694204" இலிருந்து மீள்விக்கப்பட்டது