பக்கம்:ஆண்மை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ஆண்மை

“ருக்மிணி, என்ன, இன்னும் அடையாளம் தெரியவில்லையா? இன்னும் சந்தேகமா?”

“இல்லை, ஆத்திற்கு வாங்க, போவோம்” என்றாள்.

“நான் அங்கே வரவில்லை…”

ருக்மிணிக்கு ஏதோ மனதில் அடித்த மாதிரி இருந்தது.

“உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். இங்கே வா! ஆற்றங்கரைப் பக்கம் போவோம்” என்றான்.

“சரி” என்றாள். சீமாவிற்கு இதில் சிறிது ஆச்சர்யம்தான். வெகு துணிச்சல்காரி என்று பட்டது.

"ருக்மணி உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். கேட்பையோ?”

“சந்தேகமா?”

“பின், ஏன் எனக்குக் கடிதம் எழுதவில்லை…?”

“நினைத்தேன்… நீங்கள் என்னவாவது நினைச்சிப்பியளோ என்று பயம்.”

“இப்படிப் பயப்பட்டா, நான் சொன்னபடி எப்படி நடப்பாய்?”

“கட்டாயமாக நடக்கிறேன். சத்தியமா நடக்கிறேன். சத்தியமாக…” என்று துடிதுடித்துக் கொண்டு பேசினாள்.

“உன் மாமாவும், அப்பாவும் சண்டை பிடிச்சுக்கிறாளே, அவர்கள் நம்மைக் கவனித்தார்களா? அவர்களுக்கு ஒரு புத்தி கற்பிக்க வேண்டும். நாம் இருவரும் அவர்களுக்குத் தெரியாமல், எங்கேயாவது போய் விட வேண்டும். நீ என்னுடன் வருகிறாயா? கட்டாயம் வருகிறாயா? கையடித்துக் கொடு.”

“வருகிறேன் சீ…” தன்னையறியாமல், பழைய சிறு குழந்தை நினைவிலே முடிக்கப் போனாள். திடீரென்று கணவன் என்ற மரியாதை நினைவு, அவளைக் குழப்பியடித்து விட்டது. கோபித்துக் கொள்வாரோ, மரியாதைக் குறைவாகப் பேசியதற்கு என்ற நினைவில் விம்மினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/17&oldid=1694205" இலிருந்து மீள்விக்கப்பட்டது