பக்கம்:ஆண்மை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்மை

19

கர்ஜித்தார். இதற்கு மேல், தாயாரின் பிடுங்கல் வேறு. ருக்மிணி ஒன்றிற்கும் பதில் சொல்லவில்லை. கணவன் இட்ட பணியை மறப்பாளா? அவர் வருவார், கடிதம் எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கும் போது…

இரகசியம் என்பது சில விஷயங்களில், வெகு கஷ்டமான காரியம். ஊரிலே மெதுவாகப் பரவியது. ஊர்ப் பேச்சிற்குக் கேட்பானேன்? ஒன்றிற்குப் பத்தாகத் திரிந்தது. எந்த ஊர்க் குருவியோ போய், பரமேச்வர ஐயர் குடும்பத்திற்கும் கூறி விட்டது. ருக்மிணியின் மீது, அவருக்கு உள்ளூர ஒரு பாசம் இருந்து வந்தது. முதலில் நம்ப முடியவில்லை. சமாசாரம் உண்மை என்ற பிறகு, என்ன செய்ய முடியும்? சம்பந்தியின் மீதிருந்த க்ஷாத்திரத்தை எல்லாம் ருக்மிணியின் மீது சுமத்தியும், தம் மகனுக்கு நீண்ட கடிதம் எழுதி விட்டார்.

சீமாவிற்கு முன்பு பணம் எடுத்துக் கொண்டு, ருக்மிணியுடன் ஓடிப் போக வேண்டுமென்ற ஆசை, நம்பிக்கை இரண்டும் இருந்தன. இப்பொழுது அந்த நம்பிக்கையும் பறந்து போய் விட்டது. தான்தான் குற்றவாளி என்று அப்பாவிடம் கூச்சமில்லாமல், எப்படிச் சொல்லுவது? மேலும் ருக்மிணியின் மீது பழி ஏற்பட்டு விட்டதே, அவளை எப்படி ஊரார் அறியாமல், வைத்து வாழ்வது? சீமாவின் மனம் கலங்கியது.

இச்சமயம் ருக்மிணியிடம் இருந்து குழறிக் குழறி, கண்ணீரால் நனைந்த ஒரு கடிதம் வந்தது. அவளைக் கூட்டிக் கொண்டு போய் விட வேண்டுமாம். முன்பு சொன்னபடி, சீக்கிரம் வர வேண்டுமாம். அப்பா வையராளாம்; வீடு நரகமாக இருக்காம். அப்பாவிடம் சொல்லவில்லையாம். குழந்தை ருக்மிணிக்கு என்ன நம்பிக்கை!

சீமாவிற்கு என்ன பதில் எழுதுவது என்று தெரியவில்லை. தைரியம் இல்லை. பேசாமல் இருந்து விட்டான்.

ருக்மிணியைப் பற்றி இரவெல்லாம் நினைத்து அழுதான். கண்ணீர் விட்டான். அவ்வளவுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/20&oldid=1694212" இலிருந்து மீள்விக்கப்பட்டது