பக்கம்:ஆண்மை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

ஆண்மை

ஆனால், தகப்பனாரிடம் வேறு கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறத் தைரியம் இருந்தது. அப்பா இருக்குமிடத்திற்கும், சென்னைக்கும் வெகு தூரமல்லவா? அதனால்தான் தைரியமிருந்தது. மேல் படிப்பிற்கு அவசியம் 200 ரூபாய் வேண்டுமாம்… அந்தப் பொய் சொல்லியாவது…

ருக்மிணி கடிதத்தை எதிர்பார்த்தாள். அது எப்படி வரும்?… இந்த உள்ளூர ஏற்பட்ட மன உளைச்சலும், இருதய உடைவாலும் சீமா நிறுவிய இலட்சியம் உடைந்து போயிற்று.

அந்த அதிர்ச்சியில், மூளை குழம்பி விட்டது.

“அவர் வந்து விட்டாரா? சீமா வந்தாச்சோ?”

இதுதான் புலம்பல், இரவும் பகலும்.

அவளது குழம்பிய மனதில் “சென்னைக்கே அவரிடம் சென்று விட்டால்” என்று பட்டது.

பித்தத்தில்தான், மூளை கூர்மையாக வேலை செய்யும். இரவு எல்லோரும் படுத்த பிறகு, அப்பாவின் பெட்டியைத் திறந்து, பணத்தை எடுத்துக் கொண்டாள். அன்று சீமா விடியற் காலையில் சென்ற வண்டியில் போய் விட வேண்டும் என்ற திட்டம். பித்தத்தின் கதியை என்ன சொல்வது! நினைத்தபடியே செய்து முடித்தாள்.

வண்டி சாயங்காலம், சென்னையில் கொண்டு வந்து சேர்த்தது.

பிறகு?

அவளுக்குத் தெரியவில்லை.

பித்தத்தின் வேகம் அதிகமாயிற்று.

“அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்” இதுதான் வார்த்தைகள்.

சென்னையில் கேட்கவா வேண்டும்? அதிலும் ஒரு அழகிய சிறு பெண், அலங்கோலமாகப் போகும் பொழுது.

அவளைத் தொடர்ந்து காலிக் கூட்டம். முக்கால் வாசி சிறுவர்கள் கூடியது.

சில விடர்களும் தொடர்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/21&oldid=1694213" இலிருந்து மீள்விக்கப்பட்டது