பக்கம்:ஆண்மை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்மை

21

ருக்மிணியும் ஏகாக்கிராந்தையாக, அதே புலம்பலுடன் சென்றாள்.

சிலர் சிரித்தார்கள். சிலர் துக்கப்பட்டார்கள். சென்னை அவசரத்தில், வேறு என்ன செய்ய முடியும்? மற்றவர்களுடன் வருத்தத்துடன் பேசிக் கொண்டு சென்றார்கள்.

அன்று சீமாவிற்கு உதவி செய்த குருட்டு விதி, அவனை அங்கு கொண்டு தள்ளி, மறுபடியும் உதவி என்ற தனது விளையாட்டை ஆரம்பித்தது.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவளிடம் சென்று “ருக்மிணி” என்றான்.

“அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்” என்றாள்.

அவள் குரலில் ஒரு சோகம்—நம்பிக்கையிழந்த சோகம்—தொனித்தது.

கண்களில் அவனைக் கண்டு கொண்டதாகக் குறிகள் ஒன்றும் தெரியவில்லை.

“என்னைத் தெரியவில்லையா? என்ன ருக்மிணி நான்தான் வந்திருக்கிறேன்.”

“அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்” என்றாள் மறுபடியும். குரலில் அதே தொனிப்பு.

அவளிடம் விவாதம் செய்யாமல், ஒரு வண்டி பிடித்து அவளை ஏற்றிக் கொண்டு சென்றான்; துக்கம் நெஞ்சையடைத்துக் கொண்டது. என்ன மாறுதல்? கசங்கிய மலர்.

வண்டியில் போகும் பொழுது, மறுபடியும் “அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்” என்றாள்.

சீமாவிற்குப் பதில் பேச முடியவில்லை…

அவள் அவனைக் கண்டு கொண்டாளோ என்னவோ? எனக்குத் தெரியாது.

ஆனால் சீமா, பரமேச்வரய்யரிடமும், உலகத்தினர் முன்பும் ஆண்மையுடன் நடந்து கொண்டான்.

Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/22&oldid=1694214" இலிருந்து மீள்விக்கப்பட்டது