பக்கம்:ஆண்மை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கடிதம்

அவருடைய நண்பர் சுந்தரம் வந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, “என்ன வெளியே போகலாமா? மணி ஐந்திருக்குமே!” என்றார்.

“வெற்றிலையைப் போடு.”

“என்ன! இன்னும் கதையை முடிக்கவில்லையே! ஆரம்பம் வெகு ஜோராய் இருக்கிறது. சீக்கிரம் முடியுங்கள்.”

“ஆமாம்! வேலையில்லை! எழுதித் தூக்கி நிறுத்துகிற அவசரம் ஒன்றுமில்லை. என்னடா, நல்ல கதையை ரஸிக்கிறதற்கு ஒரு பயலும் இல்லை. சும்மா எழுது எழுது என்றால், நான் பகுத்தறிவற்ற குயில் இல்லை. எனக்கு, நான் எழுதுவது சரி; நன்றாயிருக்கிறது என்று சொல்ல நான்கு பேர்கள் வேண்டும். சுற்றி, ஒன்றுக்குமற்ற கழுதைகளை வைத்துக் கொண்டு, என்ன செய்கிறது?” என்றார் சிங்காரம்.

“ரஸிக்கிறதற்கு நாங்கள் எல்லாம் இல்லையா?” என்றான் சுந்தரம்.

“நீ எனது சிநேகிதன். உனக்கு என் மேல் பிரேமை. நான் என்ன எழுதினாலும், உனக்கு நன்றாகத்தான் தெரியும். மூன்றாவது மனிதன் எவனாவது, இது வரை என் கதை நன்றாக இருக்கிறதென்று சொல்லி இருக்கிறானா? அதிருக்கட்டுமப்பா! நான் கதை எழுதுகிறேனென்று, எத்தனை பெயருக்குத் தெரியும்? வா. போகலாம்! கதை எழுதி…” என்று சொல்லி, எழுந்து வெளியே புறப்படத் தயாரானார்.

மௌனமாகக் கையிலிருந்த புகையிலையை வாயில் போட்டுக் கொண்டு, நண்பரும் எழுந்தார்.

அன்று பேச்சு எங்கு சுற்றியும், கடைசியில் இதில்தான் வந்து விழுந்து கொண்டு இருந்தது.

ஐந்தாறு நாட்கள் கழித்து, இரவு ஏழு மணி இருக்கும்.

சிங்காரவேலு தமது அறையில் உட்கார்ந்து, ஏதோ வாசித்துக் கொண்டிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/25&oldid=1694243" இலிருந்து மீள்விக்கப்பட்டது